இந்தியாவிலேயே முதல் முறையாக டிஜிட்டல் உலகில் ஒரு ஜோடி திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதாவது, இவர்களது திருமணம் மெட்டாவெர்ஸ் உலகில் நடைபெற உள்ளது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரானின் பரவலால் அவ்வப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், புதுவிதமாக திருமண நிகழ்வுகளை நடத்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், புதிதாக அறிமுகமாகி இருப்பதுதான் மெட்டாவெர்ஸ் வெட்டிங்.
தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் என்பவரும், ஜெனநந்தினி என்பவரும் இன்ஸ்டாகிராமில் சந்தித்து காதலித்துள்ளனர். தினேஷ் ஐ.டியிலும், ஜெகநந்தினி சாஃப்ட்வேர் உருவாக்கத்திலும் பணிபுரிபவர்கள். இவர்களது திருமணம் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற உள்ளது. திருமண ஜோடியும், திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கும் விருந்தினர்களும் அவரவர் வீட்டில் இருந்தபடியோ, இருந்த இடத்தில் இருந்தோ கலந்து கொள்ளலாம். இதனால், கொரோனா பரவல் போன்ற சூழலில் பாதுகாப்பான முறையில் ஒரு பெரிய நிகழ்வை நடத்தி முடிக்கலாம்.
ஆன்லைன் திருமண அழைப்பு
பிப்ரவரி 6-ம் தேதி காலை, விருதுநகர் மாவட்டம் சிவலிங்கபுர கிராமத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதே நாள் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி மெட்டாவெர்ஸில் நடைபெற இருப்பதாக இந்த காதல் ஜோடி அறிவித்திருக்கிறது. திருமண வாழ்த்து தெரிவிப்பவர்கள், கூகுள் பே அல்லது வேறு செயலிகள் மூலம் அன்பளிப்பை வழங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மெட்டாவெர்ஸ் வீடியோவின் ஆன்லைன் அழைப்பிதழ்தான் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவர்களது திருமணம் ஹாரி-பாட்டர் மெட்டாவெர்ஸ் தீமில் நடைபெற உள்ளது. புதிவித திருமணத்தை அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்