உலகின் மிகவும் பாதுகாப்பான மெசேஜ் செயலிகளுள் வாட்ஸ் அப் முக்கியமான ஒன்று. எனினும், ஹாக்கர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் வாட்ஸ் அப் செயலியும் பாதுகாப்பாக வைத்திருக்கப்பட வேண்டும். இணைய உலகில் இருக்கும் ஹாக்கர்கள் வெவ்வேறு தொழில்நுட்ப உதவிகளுடன் மக்களின் பல்வேறு சமூக வலைத்தள அக்கவுண்ட்களைக் கைப்பற்றும் வேலையைச் செய்து வருகின்றனர். 


ஃபிஷிங் தாக்குதல் என்று அழைக்கப்படும் இணையத் தாக்குதல் மூலமாக, உங்கள் சான்றுகளோடு உங்கள் அக்கவுண்டைக் கைப்பற்றுவதை பெரும்பாலான ஹாக்கர்கள் செய்து வருகின்றனர். உங்களுக்கு நெருக்கமான நண்பர்களின் எண்களில் இருந்து, உங்கள் ஸ்மார்ட்போனுக்கு மெசேஜ் வந்திருப்பதாகவும், அதில் இருக்கும் 6 டிஜிட் எண்ணை அவர்களுக்கு அளிக்குமாறும் கூறுவார்கள். நீங்கள் உங்கள் நண்பரை நம்பி, அந்த எண்ணை அளித்தால், மறுமுனையில் உங்கள் நண்பருக்குப் பதிலாக ஹாக்கர்கள் இருப்பார்கள். நீங்கள் அந்த எண்ணை அளித்த பிறகு, உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்டும் பறிபோகும். ஹாக்கர்கள் கைப்பற்றிவிடுவார்கள்.  



இந்த 6 டிஜிட் எண் என்பது உங்கள் போன் நம்பருடன், உங்கள் வாட்ஸ் அப் கணக்கை இணைக்கிறது. அதனால் இந்த எண் மிக எளிதாக உங்களைச் சுற்றியிருப்பவர்களால் திருடி விட முடியும். இதனைத் தாண்டி, உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்டைப் பாதுகாக்க நீங்கள் என்னவெல்லாம் செய்ய முடியும்? 


ஹாக்கர்கள் உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்டைக் கைப்பற்றாமல் இருக்க, பாதுகாப்புக்காக வாட்ஸ் அப் தரும் சில அம்சங்களைப் பயன்படுத்தக் கோரி பரிந்துரை செய்யப்படுகிறது. 


1. உங்கள் 6 டிஜிட் பாஸ்வேர்ட் எண்ணை யாரிடம் அளிக்க கூடாது!


இந்த 6 டிஜிட் எண் உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்டையும், உங்கள் போன் நம்பரையும் இணைப்பதோடு, உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்டை சரிபார்க்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த 6 டிஜிட் எண் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பப்படுகிறது. மற்ற ஓ.டி.பி எண்களைப் போல, இதுவும் நீங்கள் பார்ப்பதற்கு மட்டுமே. இந்த எண்ணை உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ, உங்களுக்குத் தெரியாத நபர்களுக்கோ பகிரக் கூடாது. 


உங்கள் போன் நம்பரைப் பயன்படுத்தி, புதிதாக வாட்ஸ் அப் அக்கவுண்ட் தொடங்கப்படும் போதெல்லாம் இந்த எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறது. ஹாக்கர்கள் உங்கள் அக்கவுண்டைக் கைப்பற்ற இந்த 6 டிஜிட் எண்ணை அளிக்குமாறு உங்களிடம் கேட்கக்கூடும். அப்போது அதனைப் பகிராமல், உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்டைப் பாதுகாக்க வேண்டும். 


2. Two-step verification அம்சத்தைப் பயன்படுத்தவும். 


 வாட்ஸ் அப் அக்கவுண்டைப் பாதுகாக்க, உங்கள் வங்கி க்ரெடிட், டெபிட் கார்ட்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய பாதுகாப்பான PIN நம்பரை உங்கள் வாட்சாப் அக்கவுண்டிற்கும் வைத்துக் கொள்ளலாம். இதே PIN அம்சம் வெவ்வேறு செயலிகளுக்கும் கிடைக்கிறது. 



 வாட்ஸ் அப் செயலியில், Settings சென்று, அதில் Two-step verification என்ற பகுதியில் அதனை enable செய்து, உங்களுக்கு விருப்பமான PIN எண்ணைக் குறிப்பிடலாம். வாட்ஸ் அப் செயலி சில சமயங்களில் உங்களை இந்த PIN எண்ணைப் பதிவிட உத்தரவிடும். அதன் மூலம், உங்கள் அக்கவுண்ட் உங்களிடம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும். மேலும், 6 டிஜிட் எண் மூலமாக ஹாக்கர்கள் உங்கள் அக்கவுண்டைக் கைப்பற்ற முடியாது. 


PIN எண் மறந்துவிட்டால், உங்கள் அக்கவுண்டைப் பாதுகாக்க உங்கள் ஈ மெயில் கணக்கையும் இதனோடு இணைத்துக் கொள்ளலாம். 


3. ப்ரைவசி செட்டிங்களை மாற்றி வைக்கவும்.


 வாட்ஸ் அப் செயலி பல்வேறு ப்ரைவசி வசதிகளைத் தருகிறது. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், ஹாக்கர்களிடம் இருந்து எளிதாக தப்பிக்கலாம். ப்ரைவசி செட்டிங் வழியாக, ஹாக்கர்களுக்கு நீங்கள் யார் என்பதை அறிய விடாமல் தப்பிக்க முடியும். உங்கள் ப்ரொபைல் போட்டோ, ஸ்டேட்டஸ் முதலானவற்றை உங்களுக்குத் தெரியாத நபர்களிடம் இருந்து மறைத்து வைப்பதன் மூலம், உங்கள் வாட்சாப் அக்கவுண்டைப் பாதுகாக்க முடியும்.