சோவா வைரஸால் இந்திய வங்கிகளின் மொபைல் பேங்கிங் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து என்று செர்ட்-இன் அமைப்பு எச்சரித்துள்ளது.


சோவா வைரஸ்


மொபைல் பேங்கிங் பயன்படுத்துவபவர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது, நாட்டில் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் செயல்பட்டு வரும் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்). நிழல் உலக சந்தையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'சோவா' என்ற வைரஸ் முதல்முறையாக அறிமுகம் ஆகி இருந்தது. அது, யூசர்நேம், பாஸ்வேர்டு ஆகியவற்றை திருடக்கூடியது என்று கூறினார்கள். முதலில், அமெரிக்கா, ரஷியா, ஸ்பெயின் போன்ற நாடுகளை அந்த வைரஸ் குறிவைத்தது எனக் கூறப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம், இந்தியா உள்பட பல நாடுகளை தனது இலக்கு பட்டியலில் சேர்த்துள்ளது என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வைரசை உருவாக்கியவர்கள் தற்போது அதன் 5-வது வெர்ஷனை உருவாக்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டு உள்ளனர். இந்த வைரஸ், குரோம், அமேசான் போன்ற சட்டப்பூர்வ செயலிகள் போலவே ஐகான்கள் செய்யப்பட்டு இருக்கும் போலி ஆன்ட்ராய்டு செயலிகளுக்குள் மறைந்து இருக்கும். அந்த செயலிகளை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக அதுபோன்ற ஐகான்களில் இருக்கும்.



எப்படி செயல்படுகிறது


இந்த போலி ஆன்ட்ராய்டு செயலியை யாரோ ஒருவர் பதிவிறக்கம் செய்தவுடன், அந்த போனில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள மற்ற செயலிகள் குறித்த விவரங்களை வைரசின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வருக்கு தகவல் அனுப்பும். அதன்மூலம், எந்த செயலியை குறிவைக்கபட வேண்டும் என தேர்வு செய்யப்படும். அந்த செயலிகளின் முகவரிகளை 'சோவா' வைரசுக்கு அந்த சர்வர் தெரிவிக்கும். அவை 'எக்ஸ்.எம்.எல்.' பைல் ஃபார்மட்டில் சேமிக்கப்படும். தற்போது குறிவைக்கப்பட்ட செயலிகள் பற்றி வைரசுக்கும், சர்வருக்கும் இடையே கருத்து பரிமாற்றம் நடைபெறும். 


தொடர்புடைய செய்திகள்: பரவும் காய்ச்சல் : பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சொன்னது இதுதான்..


எந்தெந்த ஆப்களை குறிவைக்கும்?


இந்த 'சோவா' வைரஸ், மொபைல் பேங்கிங் செயலி, பணம் செலுத்தும் செயலி, கிரிப்டோகரன்சி செயலி என 200-க்கு மேற்பட்ட செயலிகளை குறிவைத்து செயல்படுகிறது. இவற்றில் எதை எல்லாம் நாம் வைத்திருக்கிறோம் என்று ஆராய்ந்து அதனை தேர்வு செய்கிறது. அந்த செயலிகளுக்கு மேலே ஒரு லேயரை உருவாக்கி, ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களை எளிதில் ஏமாற்றக்கூடியது இந்த வைரஸ். இந்த செயல்முறைகளை வைரஸ் செய்து முடித்ததும் நாம் நமது மொபைலில் உள்ள மொபைல் பேங்கிங், பணப்பரிவர்த்தனை, க்ரிப்டோ போன்ற செயலியை பயன்படுத்தும்போது, அதன் யூசர்நேம், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திருடும். அந்த விவரங்களை கொண்டு வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எளிதில் எடுத்துவிடுவார்கள்.



இதில் மாட்டிக்கொள்ளமல் இருப்பது எப்படி?


தற்போது இந்திய இணைய வெளியில் 'சோவா' வைரஸ் உலவி, இந்தியாவில் உள்ள வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்துள்ளது. இந்த வைரஸ், எல்லா ஆன்ட்ராய்டு போனுக்குள்ளும் ஊடுருவி, மேற்கண்ட செயல்முறைகளை செய்யவல்லது. 'செட்டிங்ஸ்' பகுதிக்கு சென்று வைரசை நீக்குவதும் கடினமான விஷயம். நீக்கினாலும், 'இந்த செயலி பாதுகாப்பானது' என்ற செய்தியுடன் திரும்ப நமது மொபைலுக்கு வந்து விடும். எனவே, வாடிக்கையாளர்கள் ஆபத்தான செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்ப்பதே இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி. முறையான 'ஆப் ஸ்டோர்' மூலமாக செயலிகளை பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளை மட்டும் பயன்படுத்தவும். செயலிகளின் விவரங்களை படித்து பார்த்து, அடிக்கடி 'அப்டேட்' செய்ய வேண்டும். செயலிகள் கேட்கும் தேவையற்ற அனுமதிகளை அளிக்காமல், என்ன என்று படித்து பார்த்து அனுமதிக்கவும். நம்பகத்தன்மையற்ற வலைத்தளங்களை பயன்படுத்துவதை தவிருங்கள். மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் சந்தேகத்துக்குரிய 'லிங்க்'குகளை திறக்கவேண்டாம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண