வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் , ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே. புதிய ரோபோட்டிக்ஸ் நிறுவனங்கள் மட்டுமல்லாது, எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பல முன்னணி நிறுவனங்களும் கூட எதிர்கால ரோபோக்களை உருவாக்க களம் கண்டுவிட்டனர். அந்த வகையில் பிரபல சோனி நிறுவனம் Aibo dog என்னும் நாய் ரோபோவை உருவாக்கியது. கடந்த ஆண்டு இந்த ரோபோ விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 1,730 டாலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 1,29,853 ரூபாயாகும். தற்போது இதன் விலை 2,187,46 ஆக அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.அடேங்கப்பா ..இவ்வளவு ரூபாய்க்கு அப்படி இந்த ரோபோ நாயில் என்ன வசதிகள்தான் இருக்கு அப்படினு நீங்கள் ஆச்சர்யபடுவது எனக்கு நன்றாகவே தெரிகிறது.
சோனியின் ரோபோட்டிக் ஐபோ நாய் 23 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிமுகமானது. ஆனால் அத்தகைய ஈர்க்கும் வசதிகள் அதில் இடம்பெறவில்லை. காரணம் தொழில்நுட்ப வசதிகள் குறைபாடுகள். பலக்கட்ட தொடர் போராட்டத்திற்கு பிறகு பல தொழில்நுட்ப வசதிகளை புகுத்தி இதனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டுதான் அதி நவீன தொழில்நுட்பங்களை ஐபோவிற்கு புகுத்தினர். இது முதற்கட்ட விற்பனை சமயத்தில் அமெரிக்கர்களை விட , ஜப்பானியர்கள் ஐபோவை அதிகமாக வாங்கியதும் அதன் மீது அன்பு செலுத்தியதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. விற்பனைக்கு வந்தால் உடனே விற்று தீர்ந்து விடுகிறதாம்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 6,500 ரூபாய் மதிப்புள்ள கேரி செய்யும் ஸ்ட்ராப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரோபோவின் உரிமையாளர்கள் நாயினை குழந்தை போல தூக்கி செல்லலாமாம். இதனை Lucky Industries என்னும் நிறுவனம் ரோபோவிற்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது.
22 ஜாயிண்ட்ஸ் கொண்ட இந்த நாய்க்குட்டி விதவிதமான வால் ஆட்டுவது, காதுகளை ஆட்டுவது, செல்லமாக குரைப்பது தூங்குவது போல பாவனை செய்வது என பல அசைவுகளை செய்யும். OLED திரை கொண்ட கண்கள் பல விதமான உணர்ச்சிகளுக்கு ஏற்ப மாறுமாம். இந்த ரோபோ நாய்க்குட்டியை ஒரு முறை சார்ஜ் செய்ய 3 மணி நேரம் ஆகும். இரண்டு மணி நேரம் வரை இயங்கும். இதனுடன் பயன்படுத்த மை ஐபோ (My Aibo) என்ற அப்ளிகேஷனும் உள்ளது அதன் மூலமாகவும் நாயை கட்டுப்படுத்தலாம். குரல் கட்டளை மூலம் இந்த ரோபோ செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.