இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘கூ’ சமூக வலைதளம் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆம் ஆண்டு எக்ஸ் (X Formerly Known as Twitter) என்ற சமூக வலைதளத்திற்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி கொண்ட ‘கூ’ என்ற நிறுவனம் தற்போது முதலீடு தொடர்பான சிக்கல் காரணமாக தனது சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
மைக்ரோ பிளாக்கிங் சமூக வலைத்தளமான ‘கூ’ பல நிறுவனங்களுடனான இணைப்பு பேச்சுவார்த்தை தோல்வியுற்றதையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக லிங்க்டுஇன் தளத்தில் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் அபர்மேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடாவட்கா வெளியிட்டுள்ள தகவலில், “ மிகப்பெரிய இணையதள நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை ஆராய்ந்தோம். தொழில்நுட்ப மற்றும் ஊடக தளங்களுடன் இணைப்புக்கான பேச்சுவார்த்தை மேற்கொண்டோம்.ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. சிலர் முன்னுரிமைகளை மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். ’கூ’ செயலி தொடர்ந்து செயல்பட பெரும் முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், அதற்கான வழிகள் ஏதுமில்லை. மிகவும் வருத்ததுடன் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.”என்று தெரிவித்துள்ளார்.
2022-ல் 60 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்ட ’கூ’ நிறுவனத்திற்கு அப்போது நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், வருவாய் ரீதியிலாக எந்த முன்னேற்றத்தையும் அந்நிறுவனம் பதிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. பொருளாதார ரீதியிலான சவால்களை நிறுவனம் சந்தித்தது. பிப்ரவரியில் ஊடக நிறுவனமான டெய்லிஹண்ட், கூ தளத்தை வாங்க பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அந்தப் பேச்சுவார்த்தையும் சரியில்லை. அறிமுகமான புதிதில் 21 லட்சம் தினசரி பயனாளர்கள் இருந்திருக்கின்றனர். மாதத்தில் ஒரு கோடிக்கு மேற்பட்டோர் செயலியை பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தது.