ஜாலியாகப் படியுங்கள். மன அழுத்தத்துக்கு உள்ளாகாதீர்கள். வாய்ப்புகள் அத்தனை கொட்டிக் கிடக்கின்றன என்று தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு அறிவுரை அளித்துள்ளார். 


தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2 ஆண்டுகளாக மாநில அளவில் முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு கல்வி விருது, சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி முதல் கட்டமாக, 21 கல்வி மாவட்டங்களைச் சார்ந்த 800 மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இன்று விருது விழா நடந்து வருகிறது.


இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் முன்பு நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மேடையில் பேசினார். 


அப்போது அவர் கூறும்போது, ’’நீட் தேர்வால் ஏழை மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை. கற்றல் என்பது விளையாட்டாகவும் கல்வி என்பது கொண்டாட்டமாகவும் இருக்க வேண்டும். ஜாலியாகப் படியுங்கள். மன அழுத்தத்துக்கு உள்ளாகாதீர்கள். இந்த உலகம் மிக மிகப் பெரியது.


வாய்ப்புகள் கையைவிட்டுப் போனால் கவலைப்படாதீர்கள்


வாய்ப்புகள் அத்தனை கொட்டிக் கிடக்கின்றன. ஓரிரு வாய்ப்புகள் கையைவிட்டுப் போனால் கவலைப் படாதீர்கள். கடவுள் வேறோரு பெரிய வாய்ப்பை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் என்று நினையுங்கள். அது என்ன என்று தேடிக் கண்டுபிடியுங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்’’ என்று விஜய் தெரிவித்தார். 


ஜூன் 28ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட விருது விழாவில் நீட் தேர்வு குறித்து விஜய் எதுவும் பேசாதது விமர்சனத்துக்கு உள்ளானது. தொடர்ந்து இன்று நீட் தேர்வு பற்றி மட்டுமே அவர் பேசினார். தனது உரையில், "நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளை கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் சத்தியமான உண்மை.  


நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானது. 1975ம் ஆண்டுக்கு முன்பு கல்வி மாநிலப்பட்டியலில் இருந்தது, அதன்பின்பே, ஒன்றிய அரசு பொதுப்பட்டியலில் சேர்த்தது. அதுதான் முதல் பிரச்சினையாக தொடங்கியது. 2வதாக ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு. இது கல்வித்தரத்திற்கான நோக்கத்திற்கு எதிரானது.


பன்முகத்தன்மை என்பது பலவீனம் அல்ல


ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். இது மாநில உரிமைகளுக்காக மட்டும் கேட்கவில்லை. பன்முகத்தன்மை என்பது பலமே தவிர, பலவீனம் அல்ல.


மாநில மொழியில் படித்துவிட்டு, என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் அது எப்படி? அதுவும் கிராமப்புறத்தில் இருக்குற மாணவ, மாணவிகளின் மருத்துவ படிப்புக்கு அது எவ்வளவு கடினமானது.  நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையே மக்கள் மத்தியில் போய்விட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு தேவையில்லை’’ என்று விஜய் தெரிவித்தார்.