உணவு இருக்கிறதோ இல்லையோ.... உடை இருக்கிறதோ இல்லையோ... பணம் இருக்கிறதோ இல்லையோ... மொபைல் போனில் ‛பேஸ்புக்’ ஆப் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் பலருக்கு. புத்தகத்தை படிக்காதவர்கள் கூட பேஸ்புக் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் ஊடகவியலாளராக மாற்றிய பெருமையும், மாற்றி வரும் பெருமையும் பேஸ்புக் செயலிக்கு மட்டுமே உண்டு. உலகில் எந்த செயலி முடங்கினாலும் அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்று தெரியாது. அதே நேரத்தில் ஒரு நொடி முடங்கினால் கூட பேஸ்புக் பயனர்கள் இந்த உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிடுவார்கள். அந்த அளவிற்கு உடலோடு உடையாக இணைந்து விட்டது பேஸ்புக்.
இப்போது அதில் அதிர்ச்சி என்னவென்றால், பேஸ்புக் தன் பெயரை மாற்றப்போகிறதாம்.... கேட்க கொஞ்சம் அதிர்ச்சி தான் ஆனாலும் அதே உண்மை என்கின்றனர். பேஸ்புக் நிறுவனம் மெட்டாவர்ஸை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில், அக்டோபர் 28 ம் தேதி வருடாந்திர இணைப்பு மாநாட்டை நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் பங்கேற்று, அது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுஒருபுறமிருக்க பேஸ்புக் பெயர் மாறுகிறதா... அல்லது நிறுவனத்தின் பெயர் மாறுகிறதா என்கிற பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், அதற்கான விடை அக்டோபர் 28 ல் தெரியவரலாம். இந்த பெயர் மாற்றம் பேஸ்புக் நிறுவனத்தின் Instagram, WhatsApp, Oculus ஆகியவற்றையும் சார்ந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்