15 நிமிடங்களுக்கு குறைவான வீடியோக்கள் எல்லாம் இனி ரீல்ஸாகப் பகிரப்படும் என்று இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.
டிக்டொக்குடன் போட்டிபோடும் இன்ஸ்டாகிராம்:
டப்ஸ்மேஷ், டிக்டொக் போன்றவைகள் புழக்கத்தில் இருந்தபோது ஷார்ட் வீடியோக்களுக்கான மவுசு அதிகரித்தது. இவைகள் மார்க்கெட்டை விட்டுச் செல்ல அந்த இடத்தை பிடிக்க இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவைகள் போட்டிபோட்டன. சிறிய வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற பெயரிலும், யூடியூபில் ஷார்ட்ஸ் என்ற பெயரிலும் பகிரப்படுகின்றன. தொடக்கத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் நேரத்தின் அளவு 15 வினாடி முதல் 30 வினாடிகளாக இருந்தது. பின்னர் கடந்த ஆண்டு இந்த அளவு 60 வினாடிகளாக மாற்றப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இந்த அளவை 60 வினாடிகளில் இருந்து 90 வினாடிகளாக உயர்த்தியது இன்ஸ்டாகிராம். 15 நொடி வீடியோக்களை அனுமதித்த டிக்டொக் படிப்படியாக நேர அளவை உயர்த்தி இறுதியாக 10 நிமிடம் என்ற கால அளவிற்கு கடந்த மார்ச் மாதம் உயர்த்தியது.
15 நிமிட வீடியோ:
டிக்டொக்கைப் போலவே படிப்படியாக கால அளவை உயர்த்தி வரும் இன்ஸ்டாகிராம், கால அளவை 90 வினாடிகளாக உயர்த்திய சில நாள்களுக்குள்ளேயே, தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி 15 நிமிடங்களுக்குக் கீழ் இருக்கும் வீடியோக்கள் எல்லாம் ரீல்ஸாக ஷேர் செய்யப்படும் என்று கூறியுள்ளது. பழைய வீடியோக்கள் அதே நிலையிலேயே இருக்கும் என்றும் இனி பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் ரீல்ஸாக மாற்றப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ஃபுல் ஸ்க்ரீன் அனுபவத்தை பயனாளர்களுக்குக் கொடுப்பதற்காக இந்த வசதியை அறிமுகப்படுத்துவதாக இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது. அதே போல, வீடியோ மற்றும் ரீல்ஸ் என்ற இரண்டு டேப்களை ஒரே இடத்தில் வைத்து, ரீல்ஸ் மற்றும் வீடியோ இரண்டையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு வழிவகை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிருப்தியில் பயனாளர்கள்:
உங்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு பொதுவாக இருந்து, நீங்கள் வீடியோ ஒன்றை பதிவிட்டால் அது ரீல்ஸாக மாற்றம் செய்யப்படும். அந்த ஆடியோவிற்கு யார் வேண்டுமானாலும் ரீல்ஸ் செய்து வீடியோ பதிவேற்றலாம். எனினும், உங்களுடைய ஆடியோவை வைத்து மற்றொரு ரீல்ஸ் செய்யப்படுவதை செட்டிங்ஸ் மூலம் தடுக்கலாம். ஆனால் இந்த புதிய அறிவிப்பு இன்ஸ்டாகிராம் பயனாளர்களை அதிருப்தியில் தள்ளியுள்ளது. ஏனெனில், ரீல்ஸானது வெர்டிகள் மோடில் எடுக்கப்படுகிறது. பல்வேறு வீடியோக்கள் ஹரிசாண்ட்டல் வடிவில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. தற்போது ஹரிசாண்ட்டல் வடிவிலான வீடியோக்கள் ரீல்ஸில் எப்படி தெரியும் என்ற கேள்வி பயனாளர்களிடையே எழுந்துள்ளது.
கடந்த ஆண்டே அறிவிப்பு:
இன்ஸ்டாகிராம் தலைமை ஆடம் மொஸெரி கடந்த ஆண்டு வெளியிட்ட 2022ம் ஆண்டுக்கான திட்டப் பட்டியலில் ரீல்ஸில் கவனம் செலுத்தப்போவதாகவும் , வீடியோக்கள் மற்றும் ரீல்ஸை ஒருங்கிணைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது. அந்த திட்டத்தின் படி தான் தற்போது இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று கூறப்படுகிறது.
புதிய வசதிகள் அறிமுகம்:
மேலும், ரீல்ஸை ஷேர் செய்யும் புதிய வழிகளை உருவாக்கியுள்ளதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வசதிபடி கேமராவின் இரண்டு பக்கமும் ஒரே நேரத்தில் ரெக்கார்ட் செய்யமுடியும். உதாரணத்திற்கு, ஒரு இயற்கைக் காட்சியை பயனாளர் பின்பக்க கேமரா வழியாக காட்டுகிறார் என்றால், அந்த சமயத்தில் அவரது முகபாவனை எப்படி இருக்கிறது என்பதை முன்பக்க கேமராவழியாகப் படம்பிடித்துக்கொள்ள முடியும்.
அதேபோல டெம்ப்ளேட்ஸ் என்ற புதிய வசதியையும் இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.