தற்போதைய காலத்தில் விற்கப்படும் ஸ்மார்ட்ஃபோன்கள் நவீன தொழில்நுட்பத்தின் உச்சத்தை நமக்கு வெளிக்காட்டுகின்றன. அவற்றுள் ஆப்பிள் ஐஃபோன் மாடல்கள் அதிகம் விலை கொண்டதாகவும், விலைக்கேற்ப வசதிகளை அளிப்பதாகவும் உள்ளன. ஐஃபோன் பயனாளர்கள் பலருக்கும் தங்கள் மொபைலைக் குறித்த பெரும்பாலான அம்சங்களைப் பற்றி தெரியும் என்றாலும், அனைவருக்கும் தெரியாத பல ரகசிய சிறப்பம்சங்கள் ஆப்பிள் ஐஃபோனில் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படியொரு சிறப்பம்சமாக ஸ்மார்ட் பட்டன் என்ற ஆப்ஷன் ஐஃபோன்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு சிறப்பம்சங்களைப் பயன்படுத்த முடியும். இந்த ரகசிய பட்டன் கடந்த 2020ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், இது மறைவாகவே வைக்கப்பட்டிருந்தது. மேலும் இதனை `ஆன்’ செய்தால் மட்டுமே பயன்படுத்துமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரகசிய பட்டன் எங்கு இருக்கிறது, தெரியுமா? உங்கள் புதிய ஐஃபோனின் பின்பக்கத்தில் உள்ள ஆப்பிள் லோகோவிற்குள் இந்த பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. இது `Back Tap' என்று அழைக்கப்படுகிறது.
உங்கள் ஐஃபோனில் இந்த பட்டனைத் தட்டினால் அது உங்களுக்குப் புதிய சிறப்பம்சங்களைப் பயன்படுத்துவத்ற்கான வழிமுறைகளை வழங்கும். இந்த பட்டனின் மூலம் உங்கள் ஐஃபோனில் உள்ள பெரும்பாலான பணிகளை செய்வதற்கு உத்தரவிட முடியும். இந்த பட்டனை ஆக்டிவேட் செய்வதற்கு அதனை இரண்டு அல்லது மூன்று முறை தட்டினாலோ, சில நொடிகள் அழுத்திப் பிடித்தாலோ போதும்.
இந்த Back Tap அம்சம் ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் அதனைப் பயன்படுத்துவது மிக எளிதானது. நீங்கள் இதனைப் பயன்படுத்த நீண்ட நேரம் ஆப்பிள் லோகோவை அழுத்த தேவையில்லை. அதனை இரண்டு அல்லது மூன்று முறை தட்டினாலே, அது உங்களுக்குத் தேவையான உத்தரவை ஷார்ட்கட் வடிவத்தில் நிறைவேற்றி தரும். எனினும், இந்த ரகசிய பட்டன் அனைத்து ஐஃபோன்களிலும் சேர்க்கப்படவில்லை. iOS 14, iOS 15 ஆகிய மென்பொருள்களில் இயங்கும் ஐஃபோன்களில் மட்டுமே இந்த சிறப்பம்சத்தைப் பயன்படுத்த முடியும்.
இந்த பட்டனையும், ஆப்பிள் வழங்கும் ஷார்ட்கட்ஸ் செயலியையும் இணைக்கும் போது, இந்த பட்டனைப் பயன்படுத்த விரிவான ஆப்ஷன்கள் வழங்கப்படும். இதன்மூலம், ஒரு நகர்வை நீங்கள் தேர்ந்தெடுத்து அதற்கேற்ப ஒரு ஷார்ட்கட்டை அந்த நகர்வோடு இணைக்கலாம். இதனால் இந்த பட்டனை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியும். இந்த ரகசிய பட்டனை ஆக்டிவேட் செய்வது எப்படி?
ஆப்பிள் ஐஃபோனில் உள்ள ரகசிய பட்டனை ஆக்டிவேட் செய்வதற்கான வழிமுறைகள்:
1. உங்கள் ஐஃபோனின் Settings பகுதிக்குச் செல்லவும்.
2. அதில் Accessibility என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அதில் உள்ள Touch என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அதன் கீழ்ப்புறத்தில் உள்ள Back Tap என்ற பட்டனை அழுத்தவும்.
5. அதில் Double Tap என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, ஆப்பிள் லோகோவை இரண்டு முறை தட்டினால் அது செய்ய வேண்டிய உத்தரவை அதனோடு இணைக்கவும்.
6. மீண்டும் Back Tap ஆப்ஷனுக்கு செல்லும் போது, மற்ற உத்தரவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
7. அதில் Triple Tap என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தும், அதற்கேற்ப உத்தரவை இணைக்கலாம்.