தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுடன் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.


இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் கலந்து கொள்ளாமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி திமுகவினரிடம் முறையிட்டுள்ளார் என கூறப்படுகிறது.


 






தொடர்ந்து வெளியேறிய ஜோதிமணி பேச்சவார்த்தையின்போது, திமுகவினர் வெளியேற சொன்னதாக  குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா என்று ஜோதிமணி ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறியுள்ளார்.


ஏற்கெனவே கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாக திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று கரூர் நாடாளுமன்ற எம்பி ஜோதிமணி குற்றம் சாட்டினார். அத்துடன் அவர் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் எம்பி ஜோதிமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தச் சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டுள்ள ஆலோசனை கூட்டத்தில் கரூர் எம்பி ஜோதிமணி வெளியேற்றப்படுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் கரூர் மாவட்டத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் புதிய விரிசலாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க: உடைகிறது அதிமுக - பாஜக கூட்டணி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டி?