உலக ரோபோக்கள் வர்த்தக கண்காட்சியில் சவுதி அரேபிய அணி பங்கேற்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை WRS என சொல்லக்கூடிய ரோபோக்கள் அணிவகுக்கும் வர்த்தக கண்காட்சி நடைப்பெறுவது வழக்கம். கடந்த ஆண்டே WRS 2020 நடைபெற்றிருக்க வேண்டும் ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 11 வரை ஜப்பானின் நாட்டில் டோக்கியோ நகரில் உள்ள ஐச்சி சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ளது. இதில் உலகின் பல நாடுகளில் இருந்தும் ரோபோடிக்ஸ் நிறுவனங்கள் தங்கள் ரோபோக்களை காட்சிப்படுத்துவர். நிகழ்கால ரோபோக்கள் மற்றும் எதிர்கால ரோபோக்கள் என இருவகைகளில் நிறுவனங்கள் தங்கள் ரோபோக்களை காட்சிப்படுத்தும்.
அந்த வகையில் சவுதி அரேபிய அரசு ரோபோக்கள் கண்காட்சியில் தங்கள் அணிகளையும் இணைத்துள்ளது. அங்கு சவுதி ரோபோட்டிக்ஸ் குழுவினர் தாங்கள் உருவாக்கிய ரோபோவை காட்சிப்படுத்த உள்ளனர். சவுதி அரேபியாவின், ரியாத்தில் உள்ள ரோபோட்டிக்ஸ் ஆராய்ச்சி மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளரான நஹித் சிட்கி தலைமையில் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காட்சியில் பங்கேற்கும் மற்ற ரோபோக்களை காட்டிலும் சவுதி காட்சிப்படுத்தவுள்ள ரோபோக்கள் தரம் மற்றும் கட்டமைப்பில் வித்தியாசமானதாகவும் , உயர்ந்ததாகவும் இருக்கும் என தலைமை அதிகாரி நஹித் சிட்கி கூறியுள்ளார்.
ரோபோக்கள் கண்காட்சியில் சவுதி அரேபியா பங்கேற்பது இதுவே முதல் முறை என்பதால் இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கண்காட்சியில் பங்கேற்பதற்கு தங்கள் ரோபோ குறித்த விவரங்களை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தகுதிகளை ரோபோ பெற்றால் மட்டுமே கண்காட்சியில் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்படும்.
சவுதி அரேபிய குழு நூற்றுக்கும் மேற்பட்ட குழுவினரை பின்னுக்குத் தள்ளி இடம் பிடித்திருப்பது ரியாத் ரோபோ குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற கண்காட்சிகளில் பங்கேற்பதால், சவுதி இளைஞர்களுக்கு ரோபோக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதேபோல அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த பங்கேற்பு உறுதுணையாக இருக்கும் என கருதப்படுகிறது.
முன்னதாக சோஃபியா என்ற உலக புகழ்பெற்ற ஹுமனாய்ட் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கி சிறப்பித்தது சவுதி அரேபிய அரசு. உலகில் முதன் முதலில் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய பெருமை சவுதிக்கு கிடைத்துள்ளது. உலக ரோபோக்கள் கண்காட்சியில் சவுதி அரேபியா தவிர ஜப்பான், டென்மார்க், சீனா, ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றனர். இதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாடு விரிவடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக கண்காட்சி ஜப்பானில் நடைபெறுவதால் அந்த நாட்டின் பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.