வொர்க் ஃப்ரம் ஹோமா இல்லை ஆஃபீஸா? ஒரு லட்சம் ஊழியர்களுக்கு சலுகை கொடுத்த SAP நிறுவனம்
உலகின் மிகப்பெரிய பிசினஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான SAP தனது ஊழியர்கள் விரும்பினால் அலுவலகம் வந்து வேலை செய்யலாம் இல்லாவிட்டால் வீட்டிலிருந்தே பணி புரியலாம் என்ற சலுகையை வழங்கியிருக்கிறது.
பெருந்தொற்று காலத்தில் வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஜெர்மணியை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது SAP. இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம், கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் எதிர்காலத்தில் தங்களின் ஊழியர்கள் எவ்வாறு வேலை செய்ய விரும்புகின்றனர் என்பது குறித்து ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.
அப்போது அந்நிறுவன ஊழியர்களில் 94% பேர் பணிமுறைகளில் சலுகைகளை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். வெகுசிலர் மட்டுமே நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர். எஸ்ஏபி ஊழியரான ஜூலியா ஒயிட், அமெரிக்காவிலிருந்து பணிபுரிகிறார். இவர் அந்நிறுவனத்தின் சீஃப் மார்க்கெட்டிங் அண்ட் சல்யூஷன்ஸ் ஆஃபீஸராக அண்மையில் தான் நியமிக்கப்பட்டார். இதுவரை ஒருமுறை மட்டுமே ஜெர்மனி சென்றுள்ள அவர் சிஇஓ, மேலாளர்கள் உள்ளிட்ட சிலரை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறார். மற்றபடி அமெரிக்காவிலிருந்தே பணிபுரிகிறார்.
தன்னைப் போன்ற சிங்கிள் மதர்களுக்கு (தனித்துவாழும் பெண்) பணியிடங்கள் விருப்பத்தின் பேரில் அலுவலகம் வரலாம் இல்லாவிட்டால் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என வழங்கும் சலுகை மிகவும் சவுகரியமானது. எனக்கு எனது தனிப்பட்ட வேலைகளிலும் கவனம் செலுத்த முடிகிறது, தொழில்முறைத் தேவைகளையும் சிறப்பாகச் செய்ய முடிகிறது எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது ஒரு லட்சம் ஊழியர்களுக்கும் மெயில் அனுப்பிய எஸ்ஏபி நிறுவனம், நம்பிக்கையின் அடிப்படையில் பணியிடத்தை பணியாளரே தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது என்று தகவல் அனுப்பியது. இதன்மூலம் ஊழியர்கள் வீட்டில் மட்டுமல்லாது, வெளியூரோ, வெளிநாடோ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், பணி நேரத்தில் சரியாக பணியைச் செய்துவிட்டால் போதும். அதேபோல் பணி நேரத்தையும் வசதிக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
SAP நிறுவனத்தின் இந்த முடிவு மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களையும் ஈர்த்துள்ளது. Facebook (FB.O), நிறுவனமும் நிரந்தரமாக ரிமோட்டிலிருந்தே ஊழியர்கள் வேலை செய்யும் முறையை அமல்படுத்த முயற்சிக்கிறது.
பிளட்ஜ் டூ ஃபிளக்ஸ் "pledge to flex" என்ற எஸ்ஏபியின் புதிய திட்டம் உலகம் முழுவதும் வியாபிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ், உலகில் பல விஷயங்களை புதிய இயல்பாகப் புகுத்திக் கொண்டிருக்கிறது. அவற்றில் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையும் ஒன்று. இனி எஸ்ஏபியைப் போல் பல நிறுவனங்களும் இந்த முறைக்கு அணிவகுத்து நிற்கலாம்.