நமக்குத் தேவையான அனைத்து வகையான தகவலையும் பெறக்கூடிய ஒரே இடம் இணையம் மட்டுமே. இது நம் வாழ்க்கையை கணிசமான அளவு வசதியாக மாற்றியுள்ளது என்றால் அது மறுப்பதற்கில்லை. ஆனால் அதே நேரத்தில் சைபர் குற்றங்களின் ஆபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இணைய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் மக்கள் பாதுகாப்பாக search engineகளை அனுகுவதற்கு உதவுவதற்காக ஆண்டுதோறும் பாதுகாப்பான இணைய தினம் அனுசரிக்கப்படுகிறது. 


இணையதள பயன்பாடு:


இன்டர்நெட்டை அனுகுவது  தற்காலத்தில் அனைவருக்குமே வாடிக்கையானதாகிவிட்டது, மேலும் நம்மில் பெரும்பாலோர் அது ஏற்படுத்தும் அபாயங்களை புறக்கணிக்க முனைகிறோம். இன்று, வங்கிச் சேவைகள் அல்லது பல்கலைக்கழக வகுப்புகள் என அனைத்தும் ஆன்லைன் சேவைகளாக மாறிவிட்டன. இதன் காரணமாக, இணைய போர்ட்டல்களில் நமது முக்கியமான தனிப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இணையத்தைப் பயன்படுத்தும்போது கவனக்குறைவாக இருப்பது நிதி மோசடி, டேட்டா கசிவு அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.  எனவே மிகவும் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.


இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்த, நீங்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் மற்றும் குறிப்புகள் கீழே உள்ளன.


வைரஸிலிருந்து பாதுகாப்பு:



உங்கள் டெஸ்க்டாப், லேப்டாப் அல்லது மொபைல் ஃபோனில் எப்போதும் வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை நிறுவி வைக்கவும். நீங்கள் கோப்புகளைப் பதிவிறக்கும் போது அவற்றை ஸ்கேன் செய்து, உங்கள் தகவலைத் திருடக்கூடிய வைரஸ்கள் மற்றும் மால்வேர்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.


கடவுச்சொல் பாதுகாப்பை உறுதிசெய்யவும்


உங்கள் முக்கியமான ஆவணங்களின் கடவுச்சொல்லை எப்பொழுதும் பாதுகாத்து வைத்துக்கொள்ளவும், எளிதில் யூகிக்க முடியாத வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். மேலும், குறிப்பாக ஆன்லைன் வங்கி சேவைகளைப் பயன்படுத்தும் போது கடவுச்சொற்களைச் சேமிப்பதைத் தவிர்க்கவும்.


மின்னஞ்சல்கள்


சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து அனுப்பப்படும் ஸ்பேம் மின்னஞ்சல் அல்லது மின்னஞ்சல்களைத் திறக்க வேண்டாம். இத்தகைய மின்னஞ்சல்களில் கணினி வைரஸ்கள் இருக்கலாம், அவை உங்கள் கணினியைப் பாதிக்கலாம் மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவைத் திருடலாம். இது தவிர, ஸ்பேம் மின்னஞ்சல்களில் இணைப்புகளைத் திறக்கவோ பதிவிறக்கவோ வேண்டாம்.


பாதுகாப்பான நெட்வொர்க்


உங்கள் தனிப்பட்ட தரவு திருடப்படுவதைத் தவிர்க்க, பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணைய நெட்வொர்க்குடன் மட்டுமே இணைக்கப்படுவதை உறுதிசெய்யவும். பொது வைஃபை தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்தவும்.


குக்கீகளை நீக்கவும்


நீங்கள் இணையத்தில் தேடும்போதும், பல வலைப்பக்கங்களைத் திறக்கும்போதும், குக்கீகள் வடிவில் பல தகவல்கள் உங்கள் ப்ரவுசரில் சேமிக்கப்படும். சில நேரங்களில் இந்த குக்கீகள் உங்கள் தனிப்பட்ட தகவலைச் சேமிக்கலாம். குறிப்பாக நீங்கள் காக்னிடோ மோடில் இணையதளத்தைத் திறந்திருக்கும்போது, இந்தக் குக்கீகளை அனுகுவதைத் தவிர்க்கவும்.