தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது நாளுக்கு நாள் ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இதில் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுவது தானாக சிந்தித்து செயல்படும் ரோபோக்கள்தான். மருத்துவ துறையில் ரோபோக்களின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படும் இந்த சூழலில் , ரோபட் ஒன்று பன்றிக்கு வெற்றிகரமாக கீ-ஹோல் அறுவை சிகிச்சை ஒன்றை செய்து முடித்து , பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது
.The Smart Tissue Autonomous Robot சுருக்கமால ஸ்டார் என்று அழைக்கப்படக்கூடிய ரோபோவானது நான்கு பன்றிகளில் குடலின் இரண்டு முனைகளை இணைக்க லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. பொதுவாக இவ்வகை அறுவை சிகிச்சைகளை செய்ய துல்லியமான அடுத்தடுத்த இயக்கங்கள் தேவைப்படுகின்றன. இதனை செய்த ரோபோ மனிதர்களை விட கச்சிதாமாக செய்து முடித்திருப்பதாக அமெரிக்க மருத்துவ ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆக்செல் க்ரீகர், மனித உதவியின்றி ஒரு ரோபோ லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல்முறை என்று கூறியுள்ளார்.
ஸ்டார் ரோபோவானது நான்கு பன்றிகளின் குடல்களை மிகவும் வேகமாகவும் , துல்லியமாகவும் செய்து முடித்துவிட்டதாம். குடலின் இரண்டு முனைகளை இணைப்பது என்பது இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் ஒரு சவாலான செயல்முறையாகும், ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் அதிக துல்லியம் மற்றும் நிலைத்தன்மையுடன் தையல்கள் போடவேண்டும். ஒரு சிறிய கை நடுக்கம் அல்லது தவறான தையல் இரத்த கசிவுகளை ஏற்படுத்தும். இது நோயாளிக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.