கடந்தாண்டு ஜூலை மாதம் கொரோனா ஊரடங்கு காலத்தில் திடீரென சமூகவலைதளமான பேஸ்புக் மற்றும் அதன் உறுப்பு அப்ளிகேஷன்களான வாட்சப், இன்ஸ்டாகிராம் சேவைகள் திடீரென முடங்கியது. கொரோனா பரபரப்புகளுக்கிடையே அந்த விவகாரமும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
அதேபோல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் பக்கங்கள் நேற்று மீண்டும் சர்வதேச அளவில் முடங்கின. பேஸ்புக்கின் மெசென்ஜர் அப்ளிகேஷனும் சில நிமிடங்கள் முடங்கியதை அடுத்து ட்விட்டருக்குத் தாவிய இவற்றின் பயனாளர்கள் #WhatsappOutage என்கிற பெயரில் புகார்களைப் பதிவு செய்யத் தொடங்கினார்கள்.
மொத்தம் 1 லட்சம் இன்ஸ்டாகிராம் பயனாளர்களும் 25,000 வாட்ஸ்அப் பயனாளர்களும் இந்த முடக்கத்தால் பாதிக்கப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 45 மணிநேரங்கள் நீடித்த இந்த வாட்ஸ் அப் முடக்கம் குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், “ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எங்களது பேஸ்புக்கின் சில செயலிகளை அணுகுவதில் பயனாளர்களுக்குச் சில சிக்கல்கள் ஏற்பட்டது. அது தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. இதனால் பயனாளர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கோருகிறோம்” என தெரிவித்திருந்தது.
தனது ட்விட்டர் இணையதளத்தில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் நிறுவனம், பல்வேறு பயனாளர்கள் எழுப்பிய புகார்களின் பேரில் எங்களது இன்ஸ்டாகிராமில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது. இடையூறுக்கு வருந்துகிறோம்” என ட்வீட் செய்திருந்தது.