ஸ்மார்ட்போன் போட்டியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது ரியல்மி. பட்ஜெட் போன் ரசிகர்களுக்கு ஏற்ற விலையில் அதிக சிறப்பம்சங்களை வாரி வழங்கி  ரசிகர் கூட்டத்தை தன் பக்கம் இழுத்துள்ளது. குறிப்பாக 20 ஆயிரத்துக்குள் பல மாடல்களை அறிமுகம் செய்துள்ளது ரியல் மி. சிறு சிறு மாற்றங்களை கொடுத்து அடுத்தடுத்த மாடல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் ரியல்மி வெளியிடப்போகும் அடுத்த மாடல்கள்தான் ரியல்மி 8i மற்றும் ரியல்மி 8s.


ரியல்மி 8 சீரிஸ் வரிசையில் ரியல்மி 8, ரியல்மி 8 ப்ரோ, ரியல்மி 8 5ஜி ஆகிய போன் மாடல்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் ரியல்மி 8 சீரிஸின் கீழ் இந்த ரியல்மி 8i மற்றும் ரியல்மி 8s வெளியாகவுள்ளது. இந்த தகவலை ரியல்மியின் இந்தியா மற்றும் ஐரோப்பாவுக்கான சி இ ஓ மாதவ் சேத் உறுதி செய்துள்ளார். மிக விரைவில் இந்த இரண்டு மாடல்களும் இந்தியாவில் வெளியாகும் என தெரிவித்துள்ள மாதவ், அதற்கான சரியான தேதியை குறிப்பிடவில்லை. இரண்டு மாடலில் ஏதேனும் ஒரு மாடல் இந்த மாதத்திற்குள் வெளியாகும் என்றும், அடுத்த மாடல் செப்டம்பரில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மாதவ் வெளியிட்டுள்ள வீடியோவில் எந்த மாடலை முதலில் இந்தியாவில் களமிறக்கலாம் என்றும் ரசிகர்களிடம் அவர் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.




ரியல்மி 8i மற்றும் ரியல்மி 8s ஆகிய மாடல்களும் வழக்கமான பட்ஜெட் போன்களின் விலையிலேயே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரூ.15 ஆயிரத்துக்குள் இதன் விலை இருக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக ரியல்மி 8s ரூ.10ஆயிரத்துக்குள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. வரும் காலம் 5ஜி என்பதால் இனி வரும் செல்போன் மாடல்கள் 5ஜி சப்போர்ட் செய்யும் வகையிலேயே இருக்கும். அதன்படி பார்த்தால்,


நிச்சயம் இரண்டு மாடல்களும் 5ஜி சப்போர்ட் செய்யும் வகையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சப்போர்ட், 4000mAhக்கும் அதிகமான பேட்டரி கெபாசிட்டி கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பட்ஜெட் போன் பிரியர்களை அதிகம் கவரும் ரியல்மி எதிர்வரும் 8 சீரிஸ் போன்கள் மூலம் ரசிகர்களை திருபதிப்படுத்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.




முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரியல்மி ஆறு வகையான 5ஜி தொழில்நுட்ப  மொபைல் போன்களை சந்தைப்படுத்தியது. இந்நிலையில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலை மொபைல்போன்கள் அனைத்திலும் 5ஜி தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஏற்கனவே 5 மில்லியன் 5ஜி தொழில்நுட்ப மொபைல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் விலை 10 ஆயிரத்திற்கு  குறைவாக இல்லை, இந்நிலையில் ரியல்மி இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளது.