சமீபகாலங்களாக சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களை வேறு சில தளங்களில் மார்ஃபிங் செய்ய பயன்படுத்தும் குற்றம் மிகவும் அதிமாகி வருகின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கிட் ஹப் தளத்தில் இருந்து உருவான சுல்லி டீல்ஸ் என்ற செயலி இந்த சர்ச்சையில் சிக்கியது. தற்போது அதேபோன்று மீண்டும் ஒரு செயலி சிக்கியுள்ளது.
அதன்படி தற்போது கிட் ஹப் தளத்தில் இருக்கும் கோட்களை பயன்படுத்தி உருவான புதிய செயலி ‘புல்லி பாய்’(Bully Bhai). இந்த செயலியில் இஸ்லாமிய பெண்கள் சிலரின் படங்கள் திருடப்பட்டு தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவை சுட்டி காட்டி சிவசேனா கட்சி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதியும் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில்,”இந்த மாதிரி ஒரு மதம் சார்ந்த பெண்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் செயல்கள் தொடர்பாக நான் பல முறை தகவல் தொடர்பு அமைச்சரிடம் புகார் அளித்துள்ளேன். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அடிக்கடி முறையிட்டுள்ளேன். இருப்பினும் இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கபடாதது மிகவும் வருத்தமளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,”இந்த செயலியில் 100 இஸ்லாமிய பெண்களின் படங்களுக்கு மேல் உள்ளன. அவை அனைத்தும் தவறாக எடுக்கப்பட்டவை. இந்த விவகாரத்தில் யார் பின்புலத்தில் இருக்கிறார் என்பதை கண்டறிய முடியும். இந்த விவகாரம் தொடர்பாக யாரேனும் மும்பை காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக சுல்லி டீல்ஸ் என்ற தளத்திலும் இதேபோன்று இஸ்லாமிய பெண்களின் படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டன. இந்த செயலி தொடர்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இருப்பினும் அந்த வழக்குகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் அதேபோன்று மற்றொரு செயலி உருவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: உடலுறவுக்கும் சேர்ந்து வாழ்வதற்கும் ஒரே விதிதான்! நேர்கொண்ட பார்வையை உண்மையாக்கிய நீதிமன்றம்!!