சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒரு புதிய கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்திருந்தது. அந்த விதிகளை சமூக வலைதளங்கள் நீண்ட யோசனை மற்றும் மறுப்பிற்கு பிறகு ஏற்று கொள்ள ஒப்புக் கொண்டனர். எனினும் அந்த விதிகளை அவர் முழுமையாக பின்பற்றவில்லை. இந்த விதிகள் தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் ஒரு வழக்கு ஒன்றையும் தொடத்திருந்தது.
இந்நிலையில் சமூக வலைதளங்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆங்கில செய்தி தளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தரவு பாதுகாப்பு வரைவு மசோதா 2019-ஐ விவாதிக்கும் நாடாளுமன்ற கூட்டு குழுவில் சமூக வலைதளங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவிக்கிறது.
இந்தக் கூட்டு குழுவின் கடைசி கூட்டத்தில் தரவு பாதுகாப்பு வரைவு மசோதா குறித்து விவாதம் செய்த போது இந்த பரிந்துரைகள் குறித்தும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதாவது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் இங்கு ஒரு பப்ளிஷிங் தளமாக கருதப்பட்டு அவற்றிற்கு ஒரு ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏனென்றால் தற்போது இருக்கும் விதிகள் இந்த தளங்களுக்கு மிகவும் குறைவான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. ஆகவே இந்த தளங்களை ஒழுங்க படுத்த இதுபோன்ற ஒழுங்குமுறை ஆணையம் நிச்சயம் தேவை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விதிகளை ஏற்க மறுக்கும் நிறுவனங்கள் தங்களுடைய ஆண்டு வருமானத்தில் 4 சதவிகிதம் வரை அபராத கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற பரிந்துரையும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்ட தொடரில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரவு பாதுகாப்பு வரைவு மசோதாவும் சட்டமாக இந்தக் கூட்டத்தில் இயற்றபடலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது. தரவு பாதுகாப்பு வரைவு மசோதா கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு உருவாக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.ஶ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு தரவு பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு நீண்ட நெடிய ஆய்விற்கு பிறகு இந்த வரைவு மசோதாவை 2019ஆம் ஆண்டு தயார் செய்தது. 2017ஆம் ஆண்டு தனிநபர் தரவு பாதுகாப்பு அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் வரும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆகவே அடிப்படை உரிமையான தனிநபர் தரவு பாதுகாப்பை காக்கும் வகையில் இந்த தரவு பாதுகாப்பு மசோதா இயற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Delete For Everyone.. இனி இத்தனை நாட்களுக்கு பயன்படுத்தலாம்.. புது Whatsapp Reports ரிப்போர்ட் தரும் அப்டேட்ஸ்