ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஒவாக ஜேக் டார்சி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் அவர் திடீரென இன்று அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக பரக் அக்ராவல் பதவியேற்க உள்ளார். யார் இந்த பரக் அக்ராவல்? எப்படி ட்விட்டர் நிறுவனத்திற்குள் நுழைந்தார்?
இந்தியாவிலுள்ள மிக சிறப்பான ஐஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி பாம்பேவில் பரக் அக்ராவல் இளங்கலை பட்டத்தை முடித்தார். அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழக்கத்தில் கணினி அறிவியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அந்த சமயத்தில் யாஹூ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்பின்னர் 2011-ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் விளம்பரம் தொடர்பாக செயல்படும் பொறியியாளராக பணியில் சேர்ந்தார்.
அதன்பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றினார். அப்போது ட்விட்டர் தளத்தின் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தியதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. குறிப்பாக பயனாளர்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ட்வீட்களை காட்டும் செயற்கை நுண்ணறிவு திறனை இவர் மேம்படுத்தினார். அது ட்விட்டர் தளம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ந்த தளமாக மாற முக்கியமாக உதவி செய்தது.
இந்த துறையில் சிறப்பாக பணி செய்ததன் மூலம் அவர் கடந்த 2018ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பை பெற்றார். அதாவது அந்த நிறுவனத்தின் சிடிஓவாக பதவி உயர்வு பெற்றார். அப்போது முதல் ட்விட்டர் நிறுவனத்தின் சிடிஓ வாக ட்விட்டர் தொழில்நுட்பங்களில் பல முக்கிய விஷயங்களை கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார்.
சிஇஓ பதவியிலிருந்து ஜேக் டார்சி விலகிய பிறகு அந்தப் பதவிக்கு பரக் அக்ராவலை ட்விட்டர் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பரக் அக்ராவல் ஒரு ட்விட்டர் பதிவை செய்துள்ளார். அதில் அவர் ஜேக் டார்சிக்கு அனுப்பிய மின்னஞ்சல் தொடர்பாகவும் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது முதல் சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கடும் போட்டியை அளித்து வருகிறது. ட்விட்டர் நிறுவனத்தில் அதிகளவில் செய்திகள் மற்றும் கருத்துகள் பரிமாறும் தளமாக அமைந்துள்ளது. இந்த நிறுவனம் 2009ஆம் ஆண்டு தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வெரிஃபைட் டிக் அதாவது ப்ளூ டிக் தரும் நடைமுறையை அறிமுகம் செய்தது. சமீபத்தில் மீண்டும் மறுசீராய்வு செய்து தற்போது ப்ளூ டிக் தரும் நடைமுறையை மாற்றியது. இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Twitter CEO to Step Down: ட்விட்டர் CEO ஜேக் டோர்சி பதவி விலகுகிறாரா?