சமூக ஊடகங்களில் அதிகம் உலாவும் இளைஞர்கள், அவர்களின் ஆளுமைப் பண்புகளுக்கு அப்பாற்பட்டு சுமார் ஆறு மாதங்களுக்குள் மனச்சோர்வுக்கு ஆளாவதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று  தெரிவிக்கிறது.


’ஜர்னல் ஆஃப் அஃபெக்டிவ் டிஸார்டர்ஸ் ரிப்போர்ட்ஸ்’ எனும் இதழில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ள இந்த முடிவுகளின்படி பிறருடன் உடன்படும் நகர்பவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் அபாயம் 49 விழுக்காடு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.


இந்த ஆய்வானது மனச்சோர்வு அதிகரிப்பதை பல காரணிகளுடன் இணைத்துள்ளது என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


அதன்படி, மக்கள் நாள் ஒன்றுக்கு 300 நிமிடங்களுக்கு மேல் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது மனச்சோர்வை எதிர்கொள்வதாகவும்,​​ நியூராடிசிஸம் எனும் நரம்பியல் பாதிப்பு அதிகம் உள்ள நபர்கள் குறைந்த அளவு நரம்பியல் பாதிப்பு உள்ளவர்களை விட இரண்டு மடங்கு மனச்சோர்வால் பாதிக்கப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நியூராடிசிஸம் எனப்படும் நரம்பியல் பாதிப்பு உள்ள நபர் பொதுவாக கவலை, கோபம், பிற கவனிக்கும்போது பதட்டமாக உணருதல் உள்ளிட்ட எதிர்மறை எண்ணங்களை உணர்கிறார்.


 






இந்நிலையில், இந்த ஆய்வு அமெரிக்காவைச் சேர்ந்த 18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட 1,000க்கும் மேற்பட்ட நபர்களிடம் முன்னதாக மேற்கொள்ளப்பட்டது.


இவர்களிடம் சமூக ஊடகத் தளங்களில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதைக் கேட்டு சமூக ஊடக பயன்பாடு மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், திறந்த மனப்பான்மை, பிறருடன் உடன்படுதல், எடுத்த செயலை உறுதியுடன் முடித்தல், பிறருடன் உற்சாகமாக நேரம் செலவழித்தல் மற்றும் நரம்பியல் பாதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.


அதன்படி, தவறான சமூக ஒப்பீடு தன்னைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் எதிர்மறையான உணர்வுகளை அதிகரிக்கக்கூடும் என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது சமூக ஊடகத்தை அதிகம் பயன்படுத்துவதால் மனச்சோர்வு அபாயம் அதிகரிக்கிறது என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.


சமூக ஊடகங்களில் எதிர்மறையான கன்டென்டுகளில் நேரம் செலவழிப்பதன் மூலம் இந்த உணர்வுகள் அதிகரிக்கலாம் என்றும், கொஞ்சம் கொஞ்சமாக நேரடி தொடர்பு மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகளை இது கட்டுப்படுத்துகிறது என்றும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.


இந்த ஆய்வு குறித்து விளக்கியுள்ள கட்டுரையின் இணை ஆசிரியரான ரெனே மெரில், "தொழில்நுட்பம் விரிவாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் முக்கியமானவை. மெய்நிகர்   தகவல்தொடர்பு, தவறான புரிதல் மற்றும் தவறான தகவல்தொடர்பு அபாயத்தை அதிகரிக்கலாம்.


இது உறவுச் சிக்கல்கள் உள்ளிட்ட பல அபாயங்களுக்கு வழிவகுக்கும். மனநலப் பிரச்சனைகளை உருவாக்குகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.