ராஜராஜ சோழனை இந்து மன்னர் எனக் கூறுவது வரலாற்று திரிபு என இயக்குநர் வெற்றிமாறன் கூறியது உண்மை என பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமாக உள்ளவர் திருமாவளவன். இவரது 60வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த விழாவில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன் பேசியபோது ராஜராஜ சோழன் குறித்து கூறிய கருத்து சர்சைக்கு உள்ளாகியுள்ளது. அவரது பேச்சில், ”திராவிட இயக்கங்கள் சினிமாவை கலையை கையில் எடுத்தது மிகவும் முக்கியமான ஒன்று. அது இடைப்பட்ட காலத்தில் இல்லாமல் போய்விட்டது. கலை கலைக்காக கிடையாது. கலை மக்களுக்காக, மக்களைப் பிரதிபலிப்பது தான் கலை எனவும் அவர் பேசியுள்ளார். மேலும் அவர், நம்மிடம் இருந்து ஏற்கனவே பல அடையாளங்களை எடுத்து விட்டார்கள். தற்போது, வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, ராஜராஜ சோழனை இந்து மன்னனாக்குவது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த அடையாளாங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டிருந்தார். 






இவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்  அறிக்கை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில், ”தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால், யாருமே இந்துக்கள் இல்லை. ஆயிரம் ஆண்டுகளா நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து இல்லை என்பதா?” என குறிப்பிட்டிருந்தார். 






தற்போது, விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் வெற்றி மாறன் கருத்துக்கு ஆதரவாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர்.போராடவும் செயகின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.