பக்கவாதம் ஏற்படுபவர்களில் 85 சதவீதம் பேருக்கு அதுபற்றிய விழிப்புணர்வே இருப்பதில்லை என்று ஓர் ஆய்வு சொல்கிறது. தனியார் மருத்துவமனை நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த மருத்துவமனை 91 பேருக்கு பக்கவாதம் கண்டறியப்பட்டது. அதில் 85.7 சதவீதம் பேரும் பக்கவாதம் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை என்பது தெரியவந்தது.
உலகம் முழுவதிலும் ஏற்படும் நோய் காரண உயிரிழப்புகளில் பக்கவாத நோய் முன்னணி வகிக்கிறது. இந்த ஆண்டு 1 கோடியே 45 லட்சம் மக்கள் பக்கவாதம் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதில் 55 லட்சம் மக்கள் இந்நோயால் உயிரிழக்க நேரிடும் என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் 8 கோடி மக்கள் பக்கவாதத்திலிருந்து உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் 5 கோடி மக்கள் பக்கவாதத்தால் ஏற்பட்ட குறைபாடுகளுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சகஜமான நிலையில் வாழ்வதில்லை. ஆனால் சரியான சிகிச்சைகளாலும், முறையான பயிற்சிகளாலும் ஒரு அர்த்தமான வாழ்க்கையை வாழ இயலும்.
கேரளா இந்தியாவிலேயே அதிகமான கல்வியறிவு கொண்ட மாநிலமாக இருக்கிறது. ஆனால் அங்கு கூட பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இதனாலேயே ஆரம்ப அறிகுறிகளையும், கோல்டன் ஹவரையும் தவறுவிட்டுவிட்டு நிரந்தர முடக்கம், உயிரிழப்பு ஆகியனவற்றிற்கு ஆளாகின்றனர் என்று கூறுகிறார் மருத்துவர் விவேக் நம்பியார். மேலைநாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவிலேயே இளம் வயதினருக்கும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பக்கவாதம் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்திவிட்டால் பாதிப்புகள் குறைவாக இருக்கும். அதனாலேயே மக்களுக்கு பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று கூறுகிறார்கள்.
பக்கவாதம் என்றால் என்ன?
பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்படைவது தான். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். பக்கவாதத்திலிருந்து மீண்டு வர வேண்டுமென்றால் முதலில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது. பக்கவாதத்தின் அறிகுறிகளை புரிந்துக் கொள்ளுவதும், அங்ஙணம் அறிகுறிகளை உணரும்போது துரிதமாக செயல்படுவது தான். சர்வதேச அளவில் பக்கவாதத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நலப்பணி நிறுவனம், தன்னாய்வு செய்துக் கொள்ள ஒருமுறையை விளக்குகிறது.
வரும்முன் காப்போம்:
குடும்பத்தில் யாருக்கவாது பக்கவாதம் இருந்தால், உடனே பக்கவாதம் ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். ரத்தக் கொதிப்புத்தான் பக்கவாதம் ஏற்படுவதற்கான முழு முதற் காரணம், உடனே உங்கள் மருத்துவரை அணுகி, உங்களுக்கு ரத்தக் கொதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதைக் கட்டுப்படுத்த தேவையான உணவு வகைகளையும், உடற்பயிற்சிகளையும் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தேவையான மருந்துகளை மருத்துவரிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
அடுத்தது, இதய நோய் உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதயத்தில் ஏற்படும் சில நோயாலும், அடைப்புகளாலும் கூட பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் கூடுதல் உள்ளது. பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனகள் அளவு மாற்றத்தினால் கூட பக்கவாதம் வரலாம்.