புதிதாக வாங்கப்பட்ட ஒன் பிளஸ் நோர்ட் 2 5ஜி மொபைல் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மொபைல்போன் நிறுவனமான ஒன்பிளஸ் ,தனது புதிய படைப்பான  ஒன் பிளஸ் நோர்ட் 2 5 ஜியை சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அன்கூர் ஷர்மா என்பவர் தனது மனைவிக்கு  ஒன் பிளஸ் நோர்ட் 2 5ஜி  வாங்கியுள்ளார். வாங்கி ஐந்து நாட்களே ஆன ஒன் பிளஸ் மொபைலை தனது கைப்பையில் வைத்துக்கொண்டு சைக்கிளில் வெளியே சென்றுள்ளார் அன்குர் ஷர்மாவின் மனைவி தனது தோள் பையில் வைத்திருந்த அந்த மொபைல்போன் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது கணவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அன்கூர் , உடனே சிதறிய மொபைல் போனை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தீ போல இணையத்தில் பரவ ஆரமித்துவிட்டது.




இந்த சம்பவம் வைரலாக பரவியதும் பலரும் ஒன்பிளஸை நேரடியாக ட்விட்டரில் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். இது குறித்து அறிந்த ஒன் பிளஸ் நிறுவனம் ட்விட்டர் வாயிலாக பதில் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் “ ஹாய் அன்கூர், உங்களுக்கு நேர்ந்த இந்த அனுபவம் குறித்து நாங்கள் வருந்துகிறோம். நீங்கள் எங்களை நேரடியாக  தொடர்புகொள்ளுங்கள், உங்களுக்கான உதவிகளை நாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் “ என குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு அன்கூர் தனது ட்விட்டர் ஐடியை பிளாக் செய்துள்ளார். ஒன்பிளஸ் நிறுவனம் அவருக்கு இழப்பீடு தொகை வழங்கினார்களா அல்லது தொடர்புகொண்டு பேசினார்களா என்பது குறித்த விவரங்களை அன்கூர் தெரிவிக்கவில்லை.






 


இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு மின்னஞ்சல் வாயிலாக  பதிலளித்த ஒன்பிளஸ் நிறுவனம் . இது போன்ற பிரச்சனைகளை தாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட நபரை தொடர்புக்கொண்டு பேசியுள்ளதாகவும், இந்த பிரச்சனைக்கான காரணம் என்ன என்பதை விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிடில் ரேஞ்ச் மற்றும் குறைந்த பட்ஜெட் மொபைல் போன் பிரியர்களின் நம்பர் ஒன் தேர்வாக இருந்து வரும் நிறுவனம் ஒன் பிளஸ். தற்போது அதன்  புதிய மாடலான ஒன் பிளஸ் நோர்ட் 2 5ஜி வெடித்து சிதறியிருப்பதன் மூலம் பயனாளர்கள் மத்தியில் அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது