நாய் ஒரு வீட்டு விலங்கு என்பதை தாண்டி, அதற்கென பெயர் சூட்டி, வீட்டில்  ஒரு நபராக பாவிக்கும் பழக்கம் நம்மில் எத்தனையோ பேருக்கு உண்டு. சிலர் இன்னும் உச்சமாக நாய்களுக்கு மனிதர்களை போல ஆடை ஆபரணங்கள் எல்லாம் அணிவித்து, பிறந்த நாளுக்கு கேக் வெட்டி ஒரு குழந்தையை பேணி பராமரிப்பார்கள்.


இத்தகைய நாய் பிரியர்களுக்காகவே தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தி ரோபோ நாய் ஒன்று அறிமுகமாகியுள்ளது. GO1 என்ற பெயரில் யுனிட்ரீ என்ற ரோபட்டிக்ஸ் நிறுவனம் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக நாய் ரோபோக்களை  உருவாக்கும்  முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 



இந்த நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் GO1 ரோபோ நாய் குறித்த வசதிகளை வெளியிட்டுள்ளது. அதில் பார்க், சாலை என நடைப்பயிற்சி மேற்க்கொள்ளும் நபர் ஒருவருடன் GO1 ரோபோ நாய், ஒரு நாயை போலவே ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் வாக்கிங் செல்லும் அந்த நபர் ஒரு கடையில் இருந்து தண்ணீர் பாட்டில் ஒன்றினை வாங்கி அதனை அந்த ரோபோ நாய் முதுகில் வைக்கிறார், அதை சுமந்தபடியே அந்த நபருடன் ஓடி வருகிறது ரோபோ நாய்.




இதில் கொடுக்கப்பட்டுள்ள சென்சாரானது மனிதர்களில் பக்கவாட்டிலேயே ரோபோ நாயினை ஓடிவர பணிக்கிறது. மேலும் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடன் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடந்து செல்லும்போது மட்டுமல்லாமல், சைக்கிள், பைக் போன்றவற்றில் பயணம் செய்யும் பொழுதும் கூட ரோபோ நாய் உங்களுடன் ஓடிவரும். 12 கிலோ கிராம் எடையுடைய இந்த go1 ரோபோவானது நாய்கள் தலையை சாய்த்து பார்ப்பது போல தலையை சாய்த்து பார்க்குமாம்.




எவ்வளவு கூட்டம் இருந்தாலும் தனது முதலாளி யார் என்பதை துல்லியமாக கண்டறியும் வகையில் மூன்று ஹைப்பர்சானிக் சென்சார் மற்றும் ஐந்தடுக்கு ஃபிஸ் ஐ ஸ்டீரியோ டெப்த் கேமரா வசதிகள் நாய்களின் கண்களில் கொடுக்கப்பட்டுள்ளது. உயரமான சிகரங்களில் நின்று குரல் கட்டளை மூலம் பல்டி அடிக்க பணித்தால் அதையும் க்யூட்டாக செய்கிறது Go1 ரோபோ.


சார்ஜ் செய்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவின் சார்ஜிங் திறன் மற்றும் பேட்டரி திறன் குறித்த விவரங்களை யுனிட்ரீ நிறுவனம் தெரிவிக்கவில்லை. மூன்று வித வடிவங்களில் வெளியாகியுள்ள இந்த நாய் ரோபோவானது சென்சார், எடை, கேமரா மற்றும் செயல்திறன் அடிப்படையில் விலையில் மாற்றம் கொண்டுள்ளது அதன்படி அடிப்படை வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ”Go1 ஏர்” ரோபோ நாயானது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாயாக உள்ளது. அடுத்தப்படியாக உள்ள ”Go1 ” ரோபோவானது  இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 


New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!


அடுத்ததாக வெளியான ”Go1 Edu” ஆனது கிட்டத்தட்ட 6 லட்சத்துக்கும் அதிகமான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டிருப்பதால்தான் இந்த விலை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.