எத்தனை செல்போன் நிறுவனங்கள் வந்தாலும் காட்பாதரான ஐபோனை அசைச்சுக்கவே முடியாது. உச்சத்தை தொடரும் விலை என்றாலும் ஐபோனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆனால் இப்போது ஐபோனை அடித்துத்தூக்கிறேன் என சந்தையில் களமிறங்கியுள்ளது நத்திங் போன். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  Nothing Phone (1)  தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஃபிளிப்கார்ட் இணையதளம் வாயிலாக ரூ.32,999 என்னும் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. முன் பதிவு செய்தவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் என்னும் அறிமுக சலுகையில் கிடைக்கும்.இந்த போனின் அறிமுக விழா நேற்று முன் தினம் சோஷியல்மீடியாவில் லைவாக நடந்தது. இந்த போனுக்காக உலகம் முழுவதும் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்தியாவில் மட்டும் நத்திங் போன் எதிர்ப்புகளை சந்தித்தது. அதற்கு காரணம் ஒரு யூடியூபர்.






பிரசாத் டெக் என்ற யூடியூபர் கடிதம் ஒன்றை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். அதில் இந்தக்கடிதம் நத்திங் போன் நிறுவனம் அனுப்பிய கடிதம் என்றும், அதில், நத்திங் போன் தென் இந்தியர்களுக்கு இல்லை எனக் குறிப்பிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். வெறும் பேச்சாக இல்லாமல் கடிதம் ஒன்றையும் அவர் காண்பித்தார். என்ன தென் இந்தியர்களுக்கு போன் இல்லையா? முதல் நாளே இந்த கம்பெனிக்கு இவ்வளவு வன்மமா? எனக்கொதித்த இணையவாசிகள் நத்திங் போனை தடை செய்ய வேண்டும், நத்திங் போனை புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டரில் பொங்கி எழுந்தனர். ட்விட்டரில் இந்திய அளவில் நத்திங் போனுக்கு எதிராக குரல்கள் எழுந்தது. இதனைக்கவனித்த அந்த யூடியூபர் அந்த கடிதத்தை உண்மையிலேயே நத்திங் நிறுவனம் அனுப்பவில்லை என்றும், ப்ராங்காக நான் செய்தது என்றும் பின்னர் விளக்கம் அளித்தார். தான் ப்ராங்க் எனக்குறிப்பிடும் முன்பே இப்படி ஆகிவிட்டது என வருத்தம் தெரிவித்துள்ளார் அந்த யூடியூபர்.


இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள நத்திங் நிறுவனம், அந்தக்கடிதத்துக்கும் நத்திங் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்தக்கடித்தத்தை நிறுவனம் அனுப்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.






நத்திங் போன் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் கலவையான விமர்சனங்களை போன் பெற்றுள்ளது. பல சூப்பர் வசதிகள் இருந்தாலும் போனில் பல குறைகள் இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.