Apple Warning: ஆப்பிள் ஐஃபோன்களை சார்ஜ் செய்யும்போது அதன் அருகில் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்றைய நிலை:


இன்றைய காலகட்டத்தில் செல்ஃபோன் இல்லாத வீடுகளே இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளை தவிர அனைவரும் தனித்தனியே செல்போனை  பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், இன்றைய சூழ்நிலையில்,  பள்ளி மாணவர்களும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வீடுகளில் பிளக் பாயிண்டுகளில் எப்போது சார்ஜர் அப்படியே இருக்கும்.  இப்படி எப்போதும் பயன்படுத்தும் சார்ஜரை நாம் சரியாக கையாளுகிறோமா என்றால் அது கேள்விகுறிதான். வேலைக்கு செல்லும் அவசரத்தில் பிளக் பாயிண்டுகளில் இருக்கும் சார்ஜரை தனியாக எடுத்து வைப்பதோ, அல்லது ஸ்வீட்சை கூட ஆப் செய்யாமல்தான் இருக்கிறோம். குறிப்பாக சார்ஜிங் செய்யும்போது மொபைல் பயன்படுத்தக்கூடாது என்று பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனது.  இந்நிலையில், தற்போது ஐஃபோன் நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஆப்பிள் எச்சரிக்கை:


அதன்படி, ஆப்பிள் ஐஃபோன்களை சார்ஜ் செய்யும்போது அதன் அருகில் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சரியான சார்ஜிங்கின் முக்கியத்துவத்தை குறித்தும், சார்ஜிங் கேபிளுடன் இணைக்கப்பட்ட சாதனத்துடன் தூங்குவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து ஐஃபோன் நிறுவனம் விளக்கியுள்ளது. இதுகுறித்து ஐஃபோன் நிறுவனம் கூறுகையில், "பவர் அடாப்டர் அல்லது வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றில் சார்ஜ்  செய்து கொண்டு அருகில் தூங்கக் கூடாது. மின்சாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்போது அவற்றை போர்வை, தலையணை அல்லது உங்கள் உடலின் கீழ் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஐபோன்கள், பவர் அடாப்டர்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர்களை எப்போதும் நன்கு காற்றோட்டமான இடங்களில் சார்ஜ் செய்ய வேண்டும்.


ஆப்பிள் ஐஃபோன்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சார்ஜர்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். இதை விடுத்து, குறைந்த விலையில் விற்கப்படும் மலிவான சார்ஜர்களை பயன்படுத்தக்கூடாது.  வேறு ஐபோன் சார்ஜர்களை பயன்படுத்துவதால் தீ விபத்து, மின்சார விபத்து, காயங்கள், பொருள் சேதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.  மேலும், திரவங்கள் அல்லது தண்ணீருக்கு அருகில் ஃபோன்களை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். சேதமடைந்த சார்ஜர்களை உடனடியாக மாற்ற வேண்டும். ஆப்பிள் பரிந்துரைக்கு இந்த வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களையும், தங்கள் ஐஃபோன்களையும் மற்றும் தங்கள் சுற்றுப்புறங்களையும் பாதுகாப்பாக வைக்கமுடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் வந்த மாடல்:


 ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்பட்ட மற்றும் பல்வேறு புதிய அம்சங்களுடன் ஐஃபோன் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் வெளியான ஐஃபோன்-X வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து வெளியான ஐஃபோன் சீரிஸ்11, 12 ஆகியவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேநேரம், ஐஃபோன் சீரிஸ் 13 மற்றும் 14 மாடல்கள் முந்தைய இரண்டு மாடல்களை விட கூடுதலான கவனத்தை பெற்றது. ஐஃபோன் 15 சீரிஸ் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிகிறது.