பிரபல ஒ.டி.டி. தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் 116 நாடுகளில் சந்தா கட்டணத்தை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பயனர்களை கவரும் விதமாக அதிரடியாக சந்தா கட்டணத்தை குறைக்க முடிவெடுத்துள்ளதாக நெட்ஃபிலிக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் விற்பனை யுக்தி வெற்றியடைந்ததன் காரணமாக இந்தியாவிலும் சந்தா கட்டணத்தை குறைத்திருந்தது. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நெட்ஃபிளிக்ஸ் பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
நெட்பிளிக்ஸ்:
உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அவர்களை கவரும் விதமாக புதுப்புது தொடர்கள் மற்றும் படங்களுடன், வருடம் மற்றும் மாதம் என பல்வேறு விதமான சந்தா திட்டங்களும் இந்த தளத்தில் வழங்கப்படுகின்றன
இந்தியாவில் கட்டண குறைப்பு - வெற்றிக்கதை
கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் குறைந்த விலையில் சந்தா தொகுப்பை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், வாடிக்கையாளர் ஈடுபாட்டில் 30 சதவீதம் அதிகரிப்பையும் ஆண்டுக்கு ஆண்டு வருமானத்தில் 24% அதிகரிப்பையும் அடைந்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலவரம் அறிந்து பயனாளர்களை அதிகரிக்க 20-60 சதவீதம் வரை கட்டண குறைப்பு நடவடிக்கையை முதன்முதலில் இந்தியாவில் மேற்கொண்டது நெட்ஃபிளிக்ஸ்.
இந்தியாவில் பொழுதுப்போக்கு அம்சங்களுக்கான வரவேற்பை உணர்ந்து, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்புவதை உகந்த விலையில் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டணத்தை குறைக்க முடிவெடுத்ததாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்திருந்தது.
நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 116 நாடுகளின் பங்கு 5 சதவீதம். இருந்தாலும், இந்த நாடுகளில் பொழுதுப்போக்கு ப்ராடக்ட்களுக்கான வரவேற்பு அதிகமிருப்பதால்,அதன் வளர்ச்சியை அதிகரிக்கவும், நீடித்த வருமானத்திற்கும் இந்த உதவும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டணம் குறைப்பு:
கடந்த பிப்ரவரி மாதம் நெட்ஃபிலிக்ஸ் ஏற்கனவே முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கட்டண குறைப்பை அறிவித்திருந்தது. எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா, ஈரான், கென்யா, குரோஷியா, ஸ்லோவேனியா, பல்கேரியா, நிகரகுவா, ஈக்வடார், வெனிசுலா, மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்றிருந்ததன.. இந்த பட்டியலில் 12 நாடுகளில் குறைந்த விலை புதிய சந்தா திட்டங்களையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
கட்டணத்தில் 20 சதவிகிதம் முதல் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டு உள்ளதாகவும், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள சந்தாதாரர்களுக்கு விலை குறைப்பு உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மேலும் 116 நாடுகளில் சந்தா கட்டண குறைப்பை அறிவித்துள்ளது. சந்தா கட்டணம் மாதத்திற்கு ரூ.199 (மொபைல் ஒன்லி திட்டம்) என நிர்ணயிக்கப்பட்ட நெட்ஃபிளிக்ஸின் திட்டம் இப்போது ரூ.149 ஆக குறைத்துள்ளது. இதேபோல் ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சந்தா கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.