பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தளங்களில் பிரதானமாக உள்ளது நௌக்கரி.காம். நௌக்கரி என்றால் வேலை. வேலை தேடித் தருபவர் எங்கே வேலை பார்த்தார் தெரியுமா? அதன் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தானி, கடந்த திங்களன்று தனது முதல் வேலைக்கான பணி நியமனக் கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
"எனது முதல் வேலை இதுதான்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிக்சந்தானி, மும்பை விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமான லோவ் லின்டாஸின் பணி நியமனக் கடிதத்தை புகைப்படங்களுடன் ட்வீட் செய்துள்ளார். ஜூன் 26, 1984 தேதியிட்ட கடிதத்தில், அவருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகையில் நிர்வாகப் பயிற்சியாளராகப் பணியை வழங்கியது. இந்த பதவியில் அவருக்கு முதல் ஆண்டு பயிற்சியின் போது மாதம் ரூ. 500 மற்றும் கூடுதல் ரொக்கமாக இரண்டாவது ஆண்டில் மாதம் ரூ.800 வழங்கியது. ”எனக்குத் தரப்பட்ட சம்பளம் குறைவாக இருந்தது, ஆனால் நான் பிழைத்தேன்" என்று பிக்சந்தனி கூறினார். பயிற்சி சிறப்பாக இருந்தது, மேலும் அந்த நிறுவனத்தில் நீண்டகால உறவுகளை வளர்த்துக் கொண்டேன் எனக் குறிப்பிட்டுள்ள அவர், "இந்திய விளம்பரத்தின் தந்தை" அலிக் பதம்சியிடம் அவர் பணியில் இருந்தாரா என்று கேட்டதற்கு, சஞ்சீவ். பிக்சந்தனி, "அவர் அந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். என்னை விட ஏழு மடங்கு உயர்ந்த பதவி அது. அங்கே நான் வெறும் பயிற்சியாளராகத்தான் சேர்ந்தேன்" என்றார்.
தனது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி மேலும் விவரித்த சஞ்சீவ் பிக்சந்தானி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வணிகப் பள்ளியில் சேருவதற்காகத் தான் அந்த நிறுவனத்தை விட்டு விலகியதாகக் குறிப்பிடுகிறார்.