131 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் தற்போதைய வகுப்புவாத முரண்பாட்டுச் சூழலில் மத நல்லிணக்கத்தை அடையாளமாகப் பறைசாற்றும் முயற்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்படுவது இந்தியாவின் பன்முகத்தன்மையின் சிறப்பம்சமாக அமைகிறது.
இப்படியான மத நல்லிணக்க வழக்கங்களுள் ஒன்றாக, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா பெரிய மசூதியில் ஒவ்வொரு ஆண்டும் சூஃபிதார் அறக்கட்டளையைச் சேர்ந்த சிந்தி இன இந்துக்கள் தன்னார்வலர்களாக நோன்பு வைத்திருக்கும் முஸ்லிம்களுக்கு இஃப்தார் விருந்து அளிக்கும் நிகழ்வு பெரிய ஆரவாரங்கள் இன்றி கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
கடந்த 1947ஆம் ஆண்டு, இந்தியப் பிரிவினையின் போது, சென்னைக்குக் குடிபெயர்ந்த தாதா ரத்தன்சந்த் என்பவரைப் பின்பற்றுவோர் இந்தத் தன்னார்வலர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பேசியுள்ள தன்னார்வலரான கோவிந்த் பார்வானி, `எல்லா கடவுள்களும் ஒன்றே என நம்புகிறோம். மக்கள் தான் பல்வேறு வழிகளில் பிரிந்து விட்டார்கள்.. எங்கள் குருஜி எங்களுக்கு இதைத் தான் போதித்தார்’ எனக் கூறியுள்ளார். இவர் சூஃபிதார் அறக்கட்டளையின் தன்னார்வலர் பணிகள் தொடங்கப்பட்ட காலம் முதலே இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த அறக்கட்டளையில் பணியாற்றும் பலரும் சிந்து பகுதியில் இருந்து வந்த பிரிவினைக் கால அகதிகளின் இரண்டாம் தலைமுறையினர். பிரிவினையின் போது சென்னைக்குப் பயணித்து வந்த தனது தாத்தா குறித்து பேசுகிறார் தொழிலதிபரான ஜெய்கிஷன் குக்ரெஜா. தன் தாத்தாவின் சகோதரர் சென்னையில் இருந்ததால் அவரது மொத்த குடும்பமும் அப்போது சென்னைக்குக் குடிபெயர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.
தன் தந்தை சென்னையின் ஜார்ஜ் டவுன் பகுதியில் பிற மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்ட துணிகளை விற்பனை செய்து வாழ்க்கையில் முன்னேறியதாகக் கூறுகிறார் அவர்.
அதே போல, சூஃபிதார் அறக்கட்டளையினர் பின்பற்றும் தாதா ரத்தன்சந்த் ஜார்ஜ் டவுன் பகுதியில் கடை ஒன்றில் பணியாற்றியவர். பிற்காலத்தில் அவர் ஆன்மிகத்தின் பக்கம் திரும்பியுள்ளார். எனினும், தங்கள் குரு தங்களுக்கு இந்தப் பணியை அளித்திருப்பதன் மூலமாக அனைவரும் ஒரு சமூகமாக இயங்குவதை வலியுறுத்தியிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
`நாங்கள் இதனை `சேவை’ என அழைக்கிறோம். எங்கள் குருஜி இந்த வழக்கத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். நாங்கள் அதனைத் தொடர்கிறோம். எங்களை யாரும் தடுப்பதில்லை’ எனக் கூறுகின்றனர் சூஃபிதார் அறக்கட்டளையினர்.
சென்னையில் கடந்த 1795ஆம் ஆண்டு, திருவல்லிக்கேணியில் ஆர்காட் நவாப் முகமது அலி வாலாஜா கட்டிய இந்த மசூதியில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, தொழுகைக்கு வருவோர் ரமலான் மாதத்தின் போது நோன்பு திறப்பதற்கு உணவு வழங்குவதற்காக அனுமதி கேட்டுள்ளார் தாதா ரத்தன்சந்த். அப்போது இருந்து, மசூதி நிர்வாகமும், அறக்கட்டளையினரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
ஈகைப் பெருநாளின் போது ஒற்றுமையைப் பறைசாற்றுவதற்காகவும் இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து வருகிறது. தொடரட்டும் இந்த நல்லிணக்கத்தின் அடையாள விருந்து!