National Science Day 2024: தேசிய அறிவியல் தினத்திற்காக கடந்த ஆண்டுகளில், பின்பற்றப்பட்ட கருப்பொருள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


தேசிய அறிவியல் தினம் - வரலாறு:


அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில் (NCSTC) , 1986 ஆம் ஆண்டில் பிப்ரவரி 28 ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவிக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக் கொண்டது. அப்போதைய இந்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்று,  பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது. அதன்படி, 1987ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.


தேசிய அறிவியல் தினம்: முக்கியத்துவம்


இந்திய இயற்பியல் ஆராய்ச்சியாளர் சர் சந்திரசேகர வெங்கட் ராமன் பிப்ரவரி 28, 1928 அன்று 'ராமன் விளைவு' கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். இதற்காக, அவருக்கு 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம் நோபல் பரிசு வென்ற முதல் இந்திய ஆராய்ச்சியாளர் என்ற பெருமையை பெற்றார். அப்படி, 'ராமன் விளைவு' கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் தான்,  ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.


அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடு பற்றிய செய்தியை மக்களிடையே பரப்புவதே தேசிய அறிவியல் தினத்தின் அடிப்படை நோக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும், பல இலக்குகளை குறி வைத்து, தேசிய அறிவியல் தினம் இந்தியாவின் முக்கிய அறிவியல் திருவிழாக்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.  மக்களின் அன்றாட வாழ்வில் அறிவியல் பயன்பாடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய செய்தியைப் பரப்புதல், மனித நலனுக்காக அறிவியல் துறையில் அனைத்து செயல்பாடுகள், முயற்சிகள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்துதல், அனைத்து சிக்கல்களையும் விவாதித்தல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல் ஆகியவை நோக்கங்களில் அடங்கும். அறிவியலின் வளர்ச்சி, மற்றும் மக்களை ஊக்குவித்தல், அத்துடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துதல் ஆகியவையும் தேசிய அறிவியல் தினத்தின் நோக்கமாகும்.


தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள்:


கடந்த 1999ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினத்திற்கான கருப்பொருள் நிர்ணயிக்கப்படுகிறது. இதனை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தீர்மானிக்கிறது. அந்த வகையில் நடப்பாண்டு தேசிய அறிவியல் தினத்திற்கு “உள்நாட்டு தொழில்நுட்பங்களில் வளர்ச்சியடைந்த பாரதம்” கருப்பொருளாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தீர்மானிக்கப்பட்ட கருப்பொருள்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.



  • 1999 ஆம் ஆண்டின் கருப்பொருள் "எங்கள் மாறும் பூமி".

  • 2000 ஆம் ஆண்டின் கருப்பொருள் "அடிப்படை அறிவியலில் ஆர்வத்தை மீண்டும் உருவாக்குதல்"

  • 2001 ஆம் ஆண்டின் கருப்பொருள் "அறிவியல் கல்விக்கான தகவல் தொழில்நுட்பம்"

  • 2002 ஆம் ஆண்டின் கருப்பொருள் "கழிவிலிருந்து செல்வம்"

  • 2003 ஆம் ஆண்டின் கருப்பொருள் "50 ஆண்டுகள் டிஎன்ஏ & 25 ஆண்டுகள் ஐவிஎஃப் - தி ப்ளூ பிரிண்ட் ஆஃப் லைஃப்"

  • 2004 ஆம் ஆண்டின் கருப்பொருள் "சமூகத்தில் அறிவியல் விழிப்புணர்வை ஊக்குவித்தல்"

  • 2005 ஆம் ஆண்டின் கருப்பொருள் "இயற்பியலைக் கொண்டாடுதல்"

  • 2006 ஆம் ஆண்டின் கருப்பொருள் "எங்கள் எதிர்காலத்திற்காக இயற்கையை வளர்ப்பது"

  • 2007 ஆம் ஆண்டின் கருப்பொருள் "ஒரு சொட்டுக்கு அதிக பயிர்"

  • 2008 ஆம் ஆண்டின் கருப்பொருள் "பூமியைப் புரிந்துகொள்வது"

  • 2009 ஆம் ஆண்டின் கருப்பொருள் "அறிவியலின் எல்லைகளை விரிவுபடுத்துதல்"

  • 2010 ஆம் ஆண்டின் கருப்பொருள் "பாலின சமத்துவம், நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்"

  • 2011 ஆம் ஆண்டின் கருப்பொருள் "தினசரி வாழ்வில் வேதியியல்"

  • 2012 ஆம் ஆண்டின் கருப்பொருள் "சுத்தமான ஆற்றல் விருப்பங்கள் மற்றும் அணுசக்தி பாதுகாப்பு"

  • 2013 ஆம் ஆண்டின் கருப்பொருள் "மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு"

  • 2014 ஆம் ஆண்டின் கருப்பொருள் "அறிவியல் மனநிலையை வளர்ப்பது"

  • 2015 ஆம் ஆண்டின் கருப்பொருள் "தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அறிவியல்"

  • 2016 ஆம் ஆண்டின் கருப்பொருள் "தேசத்தின் வளர்ச்சிக்கான அறிவியல் சிக்கல்கள்"

  • 2017 ஆம் ஆண்டின் கருப்பொருள் "சிறப்பு திறன் கொண்டவர்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்"

  • 2018 ஆம் ஆண்டின் கருப்பொருள் "நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்"

  • 2019 ஆம் ஆண்டின் கருப்பொருள் "மக்களுக்கான அறிவியல் மற்றும் அறிவியலுக்கான மக்கள்"

  • 2020 ஆம் ஆண்டின் கருப்பொருள் "அறிவியலில் பெண்கள்"

  • 2021 ஆம் ஆண்டின் கருப்பொருள் ”அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் எதிர்காலம்: கல்வித் திறன்கள் மற்றும் வேலையில் தாக்கம்”

  • 2022 ஆம் ஆண்டின் கருப்பொருள் ”நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் & தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறை”

  • 2023ஆம் ஆண்டின் கருப்பொருள் "உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்"