டெஸ்லா, நிஸ்ஸான், ரெனால்ட், ஃபோர்ட், ஃபோக்ஸ்வேகன் முதலான கார்களில் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட் செய்வதற்கு பயன்படுத்தப்படும் செயலிகள் வாகன உரிமையாளர்களின் தகவல்களை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


கேஸ்பெர்ஸ்கி தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள `கனெக்டெட் ஆப்ஸ்’ அறிக்கையில் கார்களில் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட் செய்ய பயன்படுத்தப்படும் 69 செயலிகளை ஆய்வு மேற்கொண்டதில் ஐந்தில் ஒரு செயலியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் புகார் அளிப்பதற்குக் கூட தொடர்பு எண், தகவல்கள் முதலானவை வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 


கேஸ்பெர்ஸ்கி நிறுவனத்தின் தலைவரான செர்கி ஜோரின் இது குறித்து கூறிய போது, `தொழில்நுட்பத்தால் கனெக்ட் ஆகியிருக்கும் உலகத்தின் பயன்கள் எண்ணற்றவை. எனினும், இது வளர்ந்து வரும் துறையாக இருப்பதால் இதில் பல்வேறு ஆபத்துகள் இருப்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். டேட்டா சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு முதலானவை குறித்து அனைத்து டெவலப்பர்களும் பொறுப்பானவர்களாக செயல்படுவதில்லை. இதனால் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியில் கசியவிடப்படுகின்றன. இந்த டேட்டா சில நேரங்களில் டார்க் வெப் தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 


சைபர் கிரிமினல்கள் இதன்மூலம் தனிப்பட்ட டேட்டாவைத் திருடுவது மட்டுமின்றி, வாகனத்தை இயக்கவும் முடியும். இதனால் உடல்ரீதியான பாதிப்புகளும் ஏற்படலாம். 



கனெக்ட் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஆட்டோமொபைல் செயலிகள் பெரும்பாலும் பயனாளர்களின் வாகனங்களைத் திறப்பது, மூடுவது, அதன் பருவநிலையை மாற்றுவது, எஞ்சினை ஸ்டார்ட், ஸ்டாப் செய்வது முதலான அம்சங்களை வழங்குகின்றன. 


கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களுக்காக அதிகாரப்பூர்வ செயலிகளை உருவாக்கினாலும், பல்வேறு மொபைல் டெவலப்பர்களால் உருவாக்கப்பட்டுள்ள செயலிகள் மிகப் பிரபலமாக இருப்பதோடு, கார் தயாரிப்பு நிறுவனங்களின் செயலிகளை விட கூடுதல் அம்சங்கள் வழங்குபவையாக இருக்கின்றன. 


கேஸ்பெர்ஸ்கி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் டெஸ்லா, நிஸ்ஸான், ரெனால்ட், ஃபோர்ட், ஃபோக்ஸ்வேகம் முதலான கார்களில் பயன்படுத்தப்படும் இத்தகைய கனெக்ட் செயலிகள் காரணமாகவே இத்தகைய பிரச்னைகள் எழுவதாகக் கூறப்பட்டுள்ளது. 



இந்த செயலிகள் முழுவதுமாக பாதுகாப்புத் தன்மை கொண்டவை அல்ல எனக் கூறும் கேஸ்பெர்ஸ்கி நிறுவனத்தின் ஆய்வாளர்கள், இந்த செயலிகளுள் பாதிக்கும் மேலான எண்ணிக்கையில் இருப்பவை தங்கள் பயனாளர்களிடம் இந்த ஆபத்துகள் குறித்து எச்சரிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளனர். 


சுமார் 20 சதவிகித செயலிகளில் தங்கள் டெவலப்பர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் கேஸ்பெர்ஸ்கி நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. `இந்த 69 செயலிகளுள் 46 செயலிகள் இலவசமாகவும், டெமோ முறையிலும் கிடைக்கின்றன. இதனால் இந்த செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து சுமார் 2.39 லட்சம் முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன. இத்தனை பேர் தங்கள் கார்களைப் பிறர் இலவசமாக பயன்படுத்த வழங்குவது ஆச்சரியமாக இருக்கிறது’ எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI