செல்போன் இல்லாதவர்கள் இருக்கிறார்களா? என்பதுபோல ஸ்மார்ட்போன் தற்போது அனைவரின் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் ஆர்வத்தையும் தேவையையும் பூர்த்தி செய்யும் விதமாக சந்தையில் கொட்டிக்கிடக்கிறது செல்போன் நிறுவனங்கள். கேமராவுக்கு ஒரு போன், பாதுகாப்புக்கு ஒரு போன், கேமிங்குக்கு ஒரு போன் என ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு தனித்துவம். பொதுவாக செல்போன் நிறுவனங்கள் பட்ஜெட் பயனர்களை மனதில் வைத்து சரியாக காய்நகர்த்தி லாபம் பார்க்கின்றன. எத்தனை செல்போன் நிறுவனங்கள் வந்தாலும் காட்பாதரான ஐபோனை அசைச்சுக்கவே முடியாது. உச்சத்தை தொடரும் விலை என்றாலும் ஐபோனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆனால் இப்போது ஐபோனை அடித்துத்தூக்கிறேன் என சந்தையில் களமிறங்கவுள்ளது நத்திங் போன். ஆமாம், நீங்கள் படித்தது சரிதான். போன் நிறுவனத்தின் பெயரே நத்திங்.


நத்திங்..


இன்னும் சந்தையில் ஒருபோன் கூட வெளியாகவில்லை என்றாலும் நத்திங் போனுக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நத்திங் நிறுவனத்தின் முதல்தயாரிப்பான வைர்லஸ் இயர் பட்ஸ் 4 லட்சத்துக்கும் அதிகமான விற்பனையை கடந்து சாதனை படைத்தது. இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்த நிலையில் போன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.




ஏன் இந்த எதிர்பார்ப்பு?


நத்திங் போன் நிறுவனத்தின் நிறுவனர் கார்ல் பெய். நோக்கியாவில் வேலை பார்த்த இவர் பின்னர் நண்பர் ஒருவருடன் இணைந்து தொடங்கிய செல்போன் நிறுவனம்தான் ஒன் ப்ளஸ். சந்தையில் ஒன் ப்ளஸ் சக்கைப்போடு போட இவரும் ஒரு காரணம். பல்வேறு காரணங்களால் ஒன் ப்ளஸ் நிறுவனத்தில் இருந்து விலகி தனியாக ஒரு பிராண்டை தொடங்கினார் கார்ல். மக்களுக்கும் டெக்னாலஜிக்கும் இடையே உள்ள தடையை உடைக்க வேண்டுமென்றும், தடை என்பதே நத்திங் எனவும் தெரிவித்தார். இதனை தீமாகக் கொண்டே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதுபோக, தான் எதுவுமே இல்லாமல் நிறுவனம் தொடங்கியதால் நிறுவனத்துக்கு நத்திங் கார்ல் பெயரிட்டதாகவும் கூறப்பட்டது. அதனால் ஒன் ப்ளஸின் குவாலிட்டி நிச்சயம் இந்த போனில் இருக்குமென எதிர்பார்ப்பு எகிறுகிறது.


இன்று..


இப்படி பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே நத்திங் போன் (1) இன்று அறிமுகமாகவுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இந்நிறுவனத்தின் போனுக்காக இன்று உலகளவில் உள்ள டெக் பிரியர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். உலகளவில் டிஜிட்டல் லைவாக யூடியூப்பில் இந்த வெளியிடு நடக்கவுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இரவு 8.30 மணிக்கு அறிமுக விழா லைவ் ஆகும்.  வெளியான தகலின்படி 6.55 இஞ்ச்  டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் முன்,பின்பக்க பேனல், 50மெகாபிக்ஸல் கேமரா உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இருக்குமென தெரிகிறது.