iPhone 17 Pro launch: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 ப்ரோ மாடலில் வழங்கியுள்ள இரண்டு புதிய அம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபோன் 17ப்ரோ அறிமுகம்:
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஐபோன் 17 ப்ரோ மாடல், வரும் செப்டம்பர் 9ம் தேதி சந்தைப்படுத்தப்படும் என ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ”Awe Dropping” என்ற பெயரில் நடைபெற உள்ள நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிளின் புதிய சாதனங்கள் இடம்பெற உள்ள புதிய அம்சங்கள் என்ன? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், அழைப்பிதழ் மூலம் இரண்டு அப்க்ரேட்கள் தொடர்பான தகவல்களை ஆப்பிள் நிறுவனம் மறைமுகமாக வழங்கியுள்ளது.
5 வண்ண விருப்பங்களில் ஐபோன் 17ப்ரோ
நிகழ்ச்சிகான லோகோ மூலம் ஐபோன் 17 மாடல்களுக்கு புதிய வண்ண விருப்பங்கள் வழங்கப்படக்கூடும் என கணிக்கப்படுகிறது. அதோடு வேபர் சேம்பர் கூலிங் சிஸ்டமும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை இந்த தகவல்களை உறுதிப்படுத்தமுடியாது. ஆனால், கடந்த சில மாதங்களாக வெளியாகி வரும் தகவல்களின்படி, புதிய ஐபோன் 17 மாடலானது ஆரஞ்சு மற்றும் நீல நிற ஆப்ஷனை பெறக்கூடும். அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே நிகழ்ச்சிக்கான லோகோவிலும் ஆரஞ்சு மற்றும் அடர் நீல நிறங்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி புதிய ஐபோன் 17 ப்ரோ ஆனது, கருப்பு, வெள்ளை, க்ரே, அடர் நீலம் மற்றும் ஆரஞ்சு ஆகிய வண்ண விருப்பங்களில் வழங்கப்படலாம்.
ஐபோன் 17ப்ரோவில் கூலிங் சிஸ்டம்
இரண்டாவதாக, ஐபோன் 17 ப்ரோ மாடலில் வேபர் சேம்பர் கூலிங் சிஸ்டம் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போன் வெப்பமடைவதை சமாளிக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என கூறப்படுகிறது. அதனை உணர்த்தும் விதமாகவே நிகழ்ச்சிக்கான லோகோவை தெர்மல் கேமராவால் படம்பிடிக்கும்போது, இன்ஃப்ராரெட் ஹீட் மேப்பை உணர்த்துவதாக கூறப்படுகிறது. எனவே,ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் மேம்படுத்தப்பட்ட வெப்ப மேலாண்மை அமைப்புகளுக்கான வேபர் சேம்பர் கூலிங் சிஸ்டம் அம்சம் வழங்கப்படலாம். இந்த ஊகங்களை உறுதிப்படுத்த, செப்டம்பர் 9, 2025 வரை நாம் காத்திருக்க வேண்டும்.
ஐபோன் 17 ப்ரோ - புதுசா என்ன எதிர்பார்க்கலாம்?
ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அவற்றின் முன்னோடிகளைப் போலவே ஒரே அளவைத் தக்கவைத்துக் கொள்ளும், ஆனால் சற்று புதிய வடிவமைப்புடன். இரண்டு மாடல்களும் புதிய கேமரா ஐலேண்ட், ஒரே மாதிரியான கேமரா லென்ஸ் அமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனங்கள் புதிய A19 ப்ரோ சிப்பால் இயக்கப்படும், இது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் திறமையான செயல்திறனைக் கொண்டுவரும்.
புகைப்படம் எடுப்பதற்கு, ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் 5x ஆப்டிகல் ஜூமை வழங்கக்கூடிய புதிய 48MP டெலிஃபோட்டோ லென்ஸைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால் ப்ரோ மேக்ஸ் எடிஷன் 8x டெலிஃபோட்டோ ஜூமை வழங்கக்கூடும். கூடுதலாக, ஸ்மார்ட்போன்கள் மேம்படுத்தப்பட்ட 24MP செல்ஃபி கேமராவைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை இல்லாதது குறிப்பிடத்தக்கது.