இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைப் பொறுத்தவரை 2026-ம் ஆண்டின் தொடக்கம் சற்று கசப்பாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஒன்பது வாரங்களிலேயே ஸ்மார்ட்போன் விற்பனை சுமார் 9 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது மொபைல் உதிரிபாகங்களின் விலை உயர்வுதான்.

Continues below advertisement

மெமரி சிப்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால், அது நேரடியாக போன்களின் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க, வழக்கமாக ஆண்டின் தொடக்கத்தில் காணப்படும் மந்தமான தேவையும் சேர்ந்து விற்பனையை முடக்கியுள்ளது. மெமரி பாகங்களின் கூடுதல் செலவு காரணமாக ஆண்ட்ராய்டு நிறுவனங்கள் ஏற்கனவே சந்தையில் இருக்கும் மொபைல்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, தற்போது புதிதாக அறிமுகமாகும் போன்களும் பழைய மாடல்களை விட அதிக விலையிலேயே சந்தைக்கு வருகின்றன.

சராசரியாக ஒரு ஸ்மார்ட்போனின் விலை சுமார் 1,500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் இந்த விலை உயர்வு இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நிறுவனங்கள் தங்களது லாபம் மற்றும் விநியோக முறைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து அதிகரித்து வரும் விலையால் நுகர்வோர் புதிய போன்களை வாங்கத் தயக்கம் காட்டுகின்றனர். போதிய சலுகைகள் இல்லாமை, குறைந்த அளவிலான புதிய அறிமுகங்கள் மற்றும் விளம்பரங்கள் குறைவு போன்ற காரணங்களால் சில்லறை விற்பனை மந்தமாகவே உள்ளது.

Continues below advertisement

இருப்பினும், ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை குறைந்தாலும், சந்தையின் பண மதிப்பு பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் பிரீமியம் ரக ஸ்மார்ட்போன்களுக்கு மக்களிடையே நிலவும் மும்முரமான வரவேற்புதான். மக்கள் மலிவான போன்களைத் தவிர்த்து, தரம் வாய்ந்த விலையுயர்ந்த போன்களை வாங்க ஆர்வம் காட்டுவது நிறுவனங்களுக்குச் சற்று நிம்மதியைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.

இத்தகைய இக்கட்டான சூழலிலும் சில பிராண்டுகள் மட்டும் கெத்து காட்டியுள்ளன. விவோ நிறுவனம் தனது Y மற்றும் T சீரிஸ் மாடல்கள் மூலம் சுமார் 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேபோல், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 சீரிஸ் மீதான மோகம் மற்றும் அதிரடித் தள்ளுபடிகள் காரணமாக 12 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் பணவீக்கம் காரணமாக 2026-ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் சந்தை சுமார் 10 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் நிறுவனங்கள் பட்ஜெட் ரக போன்களை விட பிரீமியம் ரக போன்களிலேயே அதிக கவனம் செலுத்தும் எனத் தெரிகிறது. அதேசமயம் எளிய மக்களுக்கான நிதிச் சலுகைகள் குறைந்து வருவதும், போன்களின் விலை ஏறுவதும் சாதாரண நுகர்வோரின் தேவையைப் பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.