பிரபல கணினி இயங்குதளமான விண்டோஸ் 8-க்கான சப்போர்ட்டை 2023ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியுடன் நிறுத்தப்போவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரபலமான விண்டோஸ் 8:
உலகின் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டுவரும் கணினி இயங்குதளமாக மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் இயங்குதளம் இருந்து வருகிறது. விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கு அடுத்து வந்த விண்டோஸ் விஸ்டா எக்ஸ்பியை விட அதன் வடிவமைப்பில் சற்றே வேறுபட்டிருந்தாலும் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அதற்கு அடுத்து 2009ம் ஆண்டு வெளிவந்த விண்டோஸ் 7 இயங்குதளம் முன்பு வெளியான இயங்குதளங்களைக் காட்டிலும் வேறுபட்டு இருந்ததால் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு அடுத்து மூன்றே ஆண்டுகளில் 2012ல் விண்டோஸ் 8 இயங்குதளம் வெளியானது. இந்த இயங்குதளத்தின் முற்றிலும் மாறுபட்ட யூஸர் இண்டர்ஃபேஸ் கணினி பயனாளர்களைப் பெரிதும் ஈர்த்தது. விண்டோஸ் 7 பயன்படுத்தியவர்களில் பெரும்பாலானோர் இதற்கு மாறினர். ஆனால் இந்த இயங்குதளத்தின் செயல்திறன் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இல்லாததாலும், ஏகப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கியதாலும் போதுமடா சாமி என்று மீண்டும் விண்டோஸ் 7 இயங்குதளத்துக்கே பலர் மாறினர்.
விண்டோஸ் 8ஐ விரும்பாத பயனாளர்கள்:
இதனையடுத்து, விண்டோஸ் 8 ல் இருந்த பிரச்சனைகளை சரிசெய்து விண்டோஸ் 8.1 என்ற இயங்கு தளத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டது. ஆனால், முந்தைய கசப்பான அனுபவங்கள் காரணமாக பலர் அதை பயன்படுத்த முன்வரவில்லை. இதனையடுத்து 2015ல் விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியானது. விண்டோஸ் 7ஐ விட விண்டோஸ் 10 நன்றாக இருந்ததால் பலர் அதற்கு மாறினர். தற்போது விண்டோஸ் 10 பயனாளர்களுக்கு விண்டோஸ் 11 இயங்குதளம் இலவசமாகவே கிடைப்பதால், பெரும்பாலானோர் இந்த இயங்குதளத்திற்கு மாறிவருகின்றனர்.
நிறுத்தப்படும் விண்டோஸ் 8.1:
இதனால், விண்டோஸ் 8.1ற்கான தேவை குறைந்ததையடுத்து அதற்கான சப்போர்ட்டை அடுத்த ஆண்டு ஜனவரியுடன் நிறுத்தப்போவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 8க்கான தொழில்நுட்ப சப்போர்ட் கடந்த 2016ம் ஆண்டே நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் விண்டோஸ் 8.1ற்கான சப்போர்ட் மட்டும் அளிக்கப்பட்டு வந்தது. பயனாளர்கள் பெரும்பாலானோர் விண்டோஸ் 10 மற்றும் 11க்கு மாறிவிட்ட நிலையில் விண்டோஸ் 8.1 இயங்குதளத்துக்கான சப்போர்ட்டையும் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. 2023 ஜனவரிக்குப் பிறகு விண்டோஸ் 8.1 செக்யூரிட்டி அப்டேட்கள் நிறுத்தப்படுவதால், மீதமிருக்கும் பயனாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்டோஸ் 10 அல்லது 11க்கு மாற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இயங்குதளத்தை நிறுத்தப்போவதற்கான அறிவிப்புடன் பல்வேறு கேள்விகளுக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது. 2023 ஜனவரி 10ம் தேதிக்குப் பிறகு விண்டோஸ் 8.1 வேலை செய்யாதா? என்ற கேள்விக்கு, வேலை செய்யும் ஆனால் பாதுகாப்பு அப்டேட்கள் எதுவும் இருக்காது. இதனால் பயனாளர்களின் தரவுகளுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போகலாம் என்றும் மைக்ரோசாஃப்ட் 365 உள்ளிட்ட சாஃப்ட்வேர்களுக்கான சப்போர்ட்டும் இல்லாமல் போகும் என்று தெரிவித்துள்ளது.
ப்ரவுசர்களின் முன்னோடியாக இருந்த இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை சமீபத்தில் தான் நிறுத்தியது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அதனைத் தொடர்ந்து விண்டோஸ் 8.1 இயங்குதளத்துக்கான சப்போர்ட்டையும் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.