இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைக் கண்காணிக்க புதிய டூல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இணையம் விரல் நுணியில் வந்த பிறகு அதை பயன்படுத்தும் குழந்தைகளைக் கண்காணிப்பதும் அவசியமாகியுள்ளது. ஏனெனில் இணைய வழியில் குழந்தைகளை வேட்டையாடும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் இணையதளங்களில் குழந்தைகள் கண்காணிக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைக் கண்காணிக்க புதிய டூல் ஒன்றை அறிமுகத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமால் பதின்ம வயது சிறுமிகள் பாடி இமேஜ் பிரச்சினைகளுக்கு உள்ளாவதாக அங்கு வேலைபார்த்த ஒருவே சில ஆவணங்களை கசியவிட்டார். மேலும் இதைப்பற்றி இஸ்டாகிராமுக்கும் தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இளம் பயனாளர்களின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளால் சிறாருக்கான இன்ஸ்டாகிரம் கிட்ஸ் என்ற செயலியை உருவாக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் நிறுத்தி வைத்தது. இது குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் நிறுவனத் தலைவர் ஆடம் மொரேஸி ட்விட்டரில் பதிவிட்டார்.
இந்நிலையில் வயதை மறைத்து இன்ஸ்டாவை பயன்படுத்தும் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிக்க பிரத்யேக டூல்களை இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. இது நேற்று முதல் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அதன்மூலம், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இன்ஸ்டா பக்கங்களைக் கண்காணிக்கலாம். அதேபோல் எவ்வளவு நேரம் அவர்கள் இன்ஸ்டாவைப் பயன்படுத்தலாம் என்பதற்கான நேரத்தையும் நிர்ணயிக்கலாம்.
இது குறித்து ஆடம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
மே மாதம் முதல் மெட்டா நிறுவனம் குவெஸ்ட் ஹெட்செட் பயன்பாட்டுக்கும் பிரத்யேக கண்காணிப்பு டூல்களைக் கொண்டு வரவுள்ளது. இதன்மூலம் குவெஸ்ட் வாயிலாக பதின்ம வயதினர் அவர்களுக்குப் பொருத்தமில்லாத செயலிகளைத் தரவிறக்கம் செய்வது தவிர்க்கப்படும்.
இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரவே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற வீடியோ பிளாட்ஃபார்ம் பிரபலமடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் தொழில்முனைவோரும் இன்ஸ்டாகிராமை தங்களின் லாபத்துக்காககப் பயன்படுத்துகின்றனர்.
சமூக வலைதளங்களை சாதுர்யமாகப் பயன்படுத்தினால் நன்மை பெறலாம் அதே வேளையில் நேரத்தையும், நிம்மதியையும் தொலைக்கவும் சமூக வலைதளங்கள் காரணமாகிவிடுகின்றன.