பயனாளர்களின் தரவுகளை பாதுகாக்கும் விதமாக வாட்ஸ்-அப் நிறுவனம் வழங்கியுள்ள பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் என்ன என்பதை இங்கு அறியலாம்.
வாட்ஸ்-அப் வழங்கும் அப்டேட்கள்:
மெட்டா குழுமத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வாரி வழங்கி கொண்டிருக்கிறது. பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு அடுத்தடுத்து அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் தனிநபர் தரவுகளை பாதுகாப்பதற்காக, வாட்ஸ்-அப் செயலியில் உள்ள 10 பாதுகாப்பு அம்சங்கள் என்னவென்பதை விரிவாக பார்க்கலாம்.
01. சாட் - லாக்:
வாட்ஸ்-அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்களில் மிக முக்கியமானது, அண்மையில் வெளியான சாட்-லாக். இந்த அம்சத்தின் மூலம், தனி நபர்கள் உடனான உரையாடலையும் லாக் செய்ய முடியும்.
02. ப்ளூ-டிக்கை தவிர்க்கலாம்:
கிடைக்கப்பெற்ற குறுந்தகவலை பயனாளர் படித்து விட்டாலும், அதை அனுப்புனர் அற்ந்துகொள்வதற்கான ப்ளூ டிக் வராமல் தடுக்கலாம். அதேநேரம், குறுந்தகவலின் விவரங்களை பார்க்கும்போது, மறுமுனையில் இருப்பவர் குறுந்தகவலை படித்துவிட்டாரா, இல்லையா என்பதை பயனாளரால் அறிய முடியும் என்ற சிக்கல் இந்த அம்சத்தில் உள்ளது.
03. கால் சைலன்ஸ்:
வாட்ஸ்-அப் செயலியில் ஏற்கனவே அறிந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகளை பயனாளர் பிளாக் செய்ய முடியும். அதேநேரம், தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் தாமாகவே சைலன்ஸில் விழும்படி பயனாளர்கள் மாற்றி அமைக்கலாம்.
04. கைரேகை லாக்:
கைரேகை மூலமாக செயலியை லாக் செய்யும் வசதியும் வாட்ஸ்-அப்பில் உள்ளது. Settings > Privacy > scroll down and tap on Fingerprint எனும் அம்சத்தை பயன்படுத்தி பயனாளர் இந்த லாக் முறையை செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம்.
05. ஸ்டேடஸை மறைக்கும் வசதி:
வாட்ஸ்-அப் செயலியில் வைக்கும் ஸ்டேடஸை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியும் வகையில் பயனாளர்கள் மாற்றி அமைக்கலாம். புகைப்படங்களை வெளியிடும்போது அவற்றை பரிச்சயம் இல்லாத நபர்கள் காண்பதை தவிர்க்க இந்த அம்சம் பெரும் உதவிகரமாக இருக்கும்.
06. குரூப்பில் இணைவதை தவிர்க்கலாம்:
பயனாளரின் தொடர்பு எண்ணை வைத்திருக்கும் யாரேனும், அவரை எந்தவொரு குழுவிலும் இணைக்கலாம் எனும் சூழலை மாற்றி அமைக்கலாம். செட்டிங்ஸில் தேவையான மாற்றங்களை செய்வதன் மூலம், தேவையற்ற குழுக்களில் இணைக்கப்படுவதை பயனாளர் தவிர்க்கலாம்.
07. பிளாக் செய்யும் அம்சம்:
குறிப்பிட்ட நபர்களிடமிருந்து குறுந்தகவல்கள் வருவதை விரும்பாத பயனாளர்கள், அவர்களை பிளாக் செய்யும் வசதியும் வாட்ஸ்-அப் செயலியில் இடம்பெற்றுள்ளது.
08. இப்படியும் தவிர்க்கலாம்..
ஆன்லைனில் இருப்பதை சக பயனாளர்கள் அறிவதை தவிர்க்க முடியும். இதன் மூலம், அநாவசியமான சில சாட்களை பயனாளர்கள் தவிர்க்க முடியும்.
09. தானாகவே மறையும் குறுந்தகவல்கள்:
பயனாளர்கள் இடையே பகிரப்படும் குறுந்தகவல்கள் தாமாகவே டெலிட் ஆகும் அம்சமும் இதில் உள்ளது. 24 மணி நேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் என, இந்த குறுந்தகவல்கள் டெலிட் ஆவதற்கான கால அவகாசத்தை பயனாளரே நிர்ணயிக்கலாம்.
10. 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன்:
வாட்ஸ்-அப் கணக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறையை பயனாளர் பயன்படுத்தலாம். அதன்படி, tap on Account > Two-step verification > Enable என்ற வழிமுறையில் உள்ளே நுழையவும். அங்கு 6 இலக்க எண்களை கடவுச்சொல்லாக குறிப்பிட்டு உறுதிபடுதிக்கொள்ளுங்கள். அதைதொடர்ந்து, பயனாளர் தனது சுய விருப்பத்தின் பேரில் மின்னஞ்சல் முகவரியை பதிவிடலாம்.