ஒரு ஜனநாயகத்தில் வாழ்வதன் அர்த்தம் குறித்து சத்குரு சொல்கிறார்...


சத்குரு: இந்திய மக்கள் தொகையில் அறுபது சதவிகிதத்துக்கும் அதிகமானோர் முப்பது வயதுக்குக் குறைவானவர்கள். ஐம்பது கோடி இளைஞர்கள் இருக்கும்போது, அவர்கள் மட்டும் ஆரோக்கியமாக, பயிற்சி பெற்றவர்களாக, முனைப்பானவர்களாக இருந்துவிட்டால், அது ஒரு பிரம்மாண்டமான வாய்ப்பு. அது ஒரு அதிசயமாக உருவெடுக்கமுடியும். பூமியில் வேறெந்த தேசத்தாலும் செய்ய முடியாததை இந்த தேசத்தால் செய்யமுடியும், ஏனென்றால் தற்போது அது அப்படிப்பட்ட ஒரு மாபெரும் சாத்தியத்தின் வாசலில் நிலைகொண்டுள்ளது.


வழக்கமாகவே மூத்த தலைமுறையானது, எப்போதும் இளைய சமுதாயத்தை கையாளும்போது, அது சரிசெய்யப்படவேண்டிய அல்லது சிகிச்சை தேவைப்படுகின்ற ஒருவித நோய் என்பதுபோல கையாள முயற்சிக்கிறது. இளைஞர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. வாழ்க்கையிலிருந்து விலகிச்சென்றுள்ள மூத்த மக்களுக்குத்தான் சிகிச்சை தேவை. எனவே எப்போதும் கையாளத்தேவைப்படுகின்ற ஒருவித நோயைப் போல இளைய சமுதாயத்தை நடத்துவதற்குப் பதிலாக, மனித குலத்தின் ஏனைய பகுதிகளை விட இங்கு இளைய சமுதாயம் அதிக உயிரோட்டத்துடன் இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒரே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் உத்வேகமில்லாத சக்தியாக இருக்கும் காரணத்தால், ஊக்கம் இல்லையென்றால், முறையான வழிகாட்டல் இல்லையென்றால், அது மிக எளிதில் எதிர்மறையாக மாறிவிடுகிறது.


நாம் கவனித்து சரிசெய்யவேண்டிய மிக முக்கியமான அம்சம், இளைஞர்களிடையே சுத்தமாக ஊக்கமின்றி இருப்பதைத்தான்.


கல்வியின் ஊக்கமூட்டும் பரிமாணம் முற்றிலுமாக செயலிழந்துவிட்ட நிதர்சனத்திலிருந்தே இந்த நிலைமை எழுகிறது. ஊக்கம் இல்லையென்றால், எந்த மனிதரும் அவர் தற்போது வாழ்ந்திருக்கும் உடலளவிலான, மனதளவிலான அல்லது சமூக அளவிலான எல்லைகளைக் கடந்து உயர்வதில்லை. ஒரு மனிதர் ஊக்கம் பெற்றவராக இருக்கும்பொழுதுதான், அவர் தற்போது இருக்கும் எல்லைகளைக் கடந்து செல்வதற்கு விரும்புகிறார். ஆகவே நமது இளைஞர்களுக்கு தகவலறிவைப் பரிமாறுவதில் நமது நேரம், வளங்கள் மற்றும் சக்திகளை நாம் முதலீடு செய்வதைப்போல, மக்களை ஊக்கப்படுத்துவதற்கும்கூட, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நேரம், சக்தி மற்றும் வளங்களை முதலீடு செய்யவேண்டும். இந்த நாட்டில் நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக, மக்கள் ஒரே நிலைமையில்தான் வாழ்ந்து வந்துள்ளனர். ஆமாம், மகாராஜா தங்கக் காலணிகள், வைரக் கிரீடங்கள், என்று என்னவெல்லாமோ வைத்திருந்தார், ஆனால் எப்போதும் இந்த நாட்டில் மக்கள் தலைமுறை தலைமுறையாக மிக மோசமான, அடிப்படை வசதிகளே மறுக்கப்பட்ட சூழல்களில்தான் வாழ்ந்துள்ளனர், இப்போதும் அது நீடிக்கிறது. இது குறித்து நான் ஆழந்த கவலை கொள்கிறேன், ஏனென்றால் நான் எங்கு சென்றாலும், மக்கள் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையுடன் இருப்பதைக் காண்கிறேன், “ஓ, இந்தியா ஒரு வல்லரசாக மாறப்போகிறது”.


நம்மிடம் இருக்கும் வாய்ப்பினைக் கைநழுவவிடுவதில் நமக்கு நீண்ட வரலாறு உள்ளது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். நாம் அதில் மிகவும் தேர்ந்தவர்கள்! நம்மால் ஏறக்குறைய எந்த விஷயத்தையும் முட்டாள்தனமாக தவறவிட முடியும், இல்லையா? நாம் அப்படி செய்யக்கூடியவர்கள்தான், ஒரு கிரிக்கெட் மேட்சில் தொடங்கி எந்த ஒரு விஷயதை எடுத்துகொண்டாலும் – நம் கையில் இருப்பதைக்கூட நாம் கைநழுவ விட்டுவிடுகிறோம். ஆகவே, இந்த ஒரு விஷயத்தை நாம் முட்டாள்தனமாக தவறவிடாமல் இருப்பது மிக முக்கியமானது.


ஏனென்றால் சூழ்நிலையை நாம் சரியாகக் கையாண்டால், ஐம்பது கோடி மக்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றம் ஏற்படமுடியும். இந்த முறை, செழுமையை நோக்கிய பயணத்தில் நாம் நம் இலக்கினை அடைய விரும்பினால், ஒரு சில விஷயங்களில் நாம் புத்திசாலித்தனத்துடன் செயல்படவேண்டும். அவற்றுள் ஒன்று, நம்மிடம் இருக்கும் பெரும் இளைய சமுதாயத்தினரை ஒருங்கிணைத்து, பேணி வளர்த்து, வழிநடத்தி, ஊக்கப்படுத்தி, பயிற்சி கொடுத்து, அவர்களை உத்வேகமானவர்களாக மாற்றவேண்டும். மேலும், இது தானாக நிகழ்ந்துவிடப் போவதில்லை" என்கிறார்


இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் சத்குருவுடையது.