இனி ஃபேஸ்புக் மெசெஞ்சர் செயலியைப் பயன்படுத்தும் போது, உங்கள் சேட்டை யாரேனும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்தால் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பும் புதிய வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வசதி Vanish Mode என்ற அம்சத்தின் கீழ் சேட் செய்பவர்களுக்கு, அதில் யாரேனும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்தால் வருமாறு உருவாகப்பட்டிருந்தது. தற்போது இந்த வசதி end-to-end encryption அம்சத்தின் கீழ் இயங்கும் அனைத்து சேட்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் மெசெஞ்சர் செயலியை வெளியிட்டுள்ள `மெட்டா’ நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், `நீங்கள் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சேட்களைப் பயன்படுத்தும் போது, அதனைப் பாதுகாப்பாக பயன்படுத்துவதை நாங்கள் முக்கியம் என்று கருதுவதால், யாரேனும் அழியும் மெசேஜ்களை ஸ்க்ரீன்ஷாட் செய்தால், உங்களுக்கு அது சொல்லப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மெசெஞ்சர் செயலியில் end-to-end encryption அம்சத்தின் கீழ் இயங்கும் Group chats, Calls முதலான சிறப்பம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 



ஃபேஸ்புக் மெசெஞ்சர் தற்போது மெசேஜ்களுக்கு எமோஜி மூலம் ரியாக்‌ஷன் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மெசேஜை லாங் ப்ரெஸ் செய்யும் போது மொத்தமாக எமோஜி ட்ரே காட்டப்படும்; அதே போல, ஒரு மெசேஜை இருமுறை தட்டினால், அதற்கு `ஹார்ட்’ சின்னத்தை ரியாக்‌ஷனாக அனுப்ப முடியும். இந்த சிறப்பம்சம் தற்போது இன்ஸ்டாகிராம் தனிப்பட்ட மெசேஜ்களில் பயன்படுத்தப்படு வருகிறது. இது விரைவில் வாட்சாப் செயலியிலும் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், வாட்சாப், இன்ஸ்டாகிராம் முதலான `மெட்டா’ நிறுவனத்தின் செயலிகளில் ஏற்கனவே இருக்கும் அம்சங்கள் தற்போது ஃபேஸ்புக் மெசெஞ்சர் செயலியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன்மூலம் ஃபேஸ்புக் மெசெஞ்சரிலும் ஒரு சேட்டில் தனியாக ஒரு மெசேஜைத் தேர்ந்தெடுத்து, அதனை ஸ்வைப் செய்வதன் மூலம், `ரிப்ளை’ அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. 


கூடுதலாக, ஃபேஸ்புக் மெசெஞ்சர் செயலியும் எதிரில் சேட் செய்பவர் டைப் செய்தால் அதனைக் குறிக்கும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட உரையாடல்களுக்கும், குழு உரையாடல்களுக்கும் பொருந்தும். மேலும், வாட்சாப் செயலியில் இடம்பெற்றுள்ள மெசேஜை ஃபார்வேர்ட் செய்யும் வசதியை ஃபேஸ்புக் மெசெஞ்சரிலும் சேர்க்கப்படுள்ளது. எனினும், வாட்சாப் செயலியைப் போல இதிலும் Forwarded என்ற குறியீடு இடம்பெறுமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தக் குறியீட்டின் மூலம் ஒரு மெசேஜின் நம்பகத்தன்மை பரிசோதிக்கப்படுகிறது. 



அடுத்ததாக, ஃபேஸ்புக் மெசெஞ்சர் செயலியில் பயனாளர்கள் வீடியோ அனுப்பும் போது, அவற்றை எடிட் செய்யும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்ததாக `save media' என்ற அம்சமும் சேர்ப்பட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் அக்கவுண்ட்களுக்கு Verified பேட்ஜ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், `இந்த சிறப்பம்சங்கள் உங்கள் தனிப்பட்ட மெசேஜிங் அனுபவத்தை மேம்படுத்தி, உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நீங்கள் உரையாட இந்த சிறப்பம்சங்கள் பயன்படும் என நம்பிக்கை கொள்கிறோம்’ எனக் கூறியுள்ளது. எனினும் இந்த சிறப்பம்சங்களைப் பயன்படுத்த ஃபேஸ்புக் மெசெஞ்சரின் லேட்டஸ்ட் அப்டேட்டைப் பயன்படுத்த வேண்டும்.