மகேந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான வெளியீடான ஸ்கார்பியோ ரக காரின் புதிய வெர்ஷனான ஸ்கார்பியோ-என் இன்று வெளியாகிறது.


இந்திய முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா இந்திய கார் சந்தையில் கடும் போட்டி போட்டு வருகிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிது புதான மாடல்களில் கார்களை வெளியிட்டு மாருதி சுசுகி, ஹூண்டாய், டொயோட்டா, கியா போன்ற நிறுவனங்களுக்கு சவாலாக கார் விற்பனையில் கடும் போட்டிபோட்டு வருகிறது. மகேந்திரா நிறுவனத்தின் பல சொகுசு கார்கள் விற்பனையில் சக்கைபோடு போட்டாலும் மிகவும் பிரபலமடைந்த கார் என்றால் அது ஸ்கார்ப்பியோ தான். கடந்த 2002ம் ஆண்டு இந்திய கார் சந்தைகளில் வெளியான இந்த கார் அதன் வடிவமைப்பு, நிறம், சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட காரணங்களால் பெரும் வரவேற்பைப் பெற்றது.  இது, "Car of the Year", "Best SUV of the Year", "Best Car of the Year" போன்றவற்றை முன்னணி நிறுவனங்களிடமிருந்து பெற்றது. இந்த காரானது 2002 முதல் தற்போது வரை 4 அப்டேட்டுகளில் வந்திருக்கின்றன.




 வடிவமைப்பை மாற்றாமல் சிறு சிறு மாற்றங்களுடன் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது முற்றிலும் மாறுபட்ட வடிவிலான ஸ்கார்ப்பியோவை களமிறக்குகிறது மகேந்திரா நிறுவனம். மகேந்திரா ஸ்கார்பியோ என் என்று பெயரிடப்பட்ட இந்த புதிய கார் இன்று ஜூன் 27ம் தேதி மாலை வெளியாகிறது. இந்த கார் “சொகுசுகார்களின் பெரியப்பா” என்று கூறப்படுகிறது.




ஸ்கார்பியோ என் காரில் உள்ள உள்புற மற்றும் வெளிப்புற டிசைன்கள், தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோ க்ளாஸிக் கார்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. இந்த காரில் ட்வின் பாட் எல்இடி ப்ரோஜக்டார், எல்இடி ஃபாக் லேம்ப், மற்றும் சி வடிவிலான எல்இடி டிஆர்எல்களைக் கொண்டுள்ளது. மல்டி ஸ்போக் அல்லாய் வீல், 6 ஸ்லாட் க்ரோம் ஃபினிஷ்ட் க்ரில் மற்றும் எக்ஸ்யுவி 700ல் இருக்கும் மகேந்திராவின் புதிய லோகோ ஆகியவற்றை இந்த கார் கொண்டிருக்கும்.




காரின் அளவைப் பொறுத்தவரை, 4,662 மில்லி மீட்டர் நீளம், 1197 மிமீ அகலம் மற்றும் 1,870 மிமீ உயரத்தையும் கொண்டிருக்கிறது. வீல்பேஸை பொருத்தவரை இந்த கார் 2,750 மிமீ அளவைக் கொண்டிருக்கிறது. காரின் இண்டீரியரைப் பொறுத்தவரை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் கூடிய பெரிய டச் ஸ்க்ரீன் தகவல் மற்றும் பொழுதுபோக்கு அமைப்பு , ஏசி, 3டி மியூஸிக் சிஸ்டம், இரண்டு பக்க க்ளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லஸ் சார்ஜிங், காரின் மேற்கூறையில் ஸ்பீக்கர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட ட்ரைவிங் அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.




இந்த காரானது 2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சின் ஆகிய மாடல்களில் வருகிறது. இந்த எஞ்சின்கள் தற்போது எக்ஸ்யூவி 700 மாடல் கார்களில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு எஞ்சின்களும் 6 கியர்களைக் கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் வெளியாகிறது. அடுத்து வரவிருக்கும் ஸ்கார்பியோ என் காரின் உயர் மாடலில் ஆல் வீல் ட்ரைவ் என்று அழைக்கப்படும் ஏடபுள்யூடி அமைப்புடன் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விலையைப் பொறுத்தவரை 6 சீட்டர்களைக் கொண்ட இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையானது 13.65 லட்சம் ரூபாய் முதல் 19 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.