பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்திய மதிப்பில், ரூ.3.5 லட்சம் கோடிக்கு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றினார். அன்று தொடங்கி தற்போது வரை எலான் மஸ்க், எப்போது எந்த குண்டை தூக்கி போடுவார் என்ற பரபரப்பிலேயே ட்விட்டர் பயனர்கள் உள்ளனர்.
அடுத்தடுத்து தொடரும் சர்ச்சைகள்:
வெரிஃபைடு டிக் வாங்க மாதாமாதம் 8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து பல விவாதங்களை கிளப்பி வருகிறார். அப்படியே ஏதாவது ஒரு அப்டேட்டை அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தங்கள் வட்டாரங்கள் மூலம் அறிந்து செய்தி வெளியிட்டால் அதில் சென்று "அப்படியா?" என்று கேட்டு குட்டையை குழப்பி விடுகிறார் எலான் மஸ்க். அதனால் ட்விட்டரில் இது குறித்த விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. டிவிட்டர் நிறுவனத்தின் 50% ஊழியர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாலும், எலான் மஸ்கிற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இதனிடையே, தரவுகள் சரிபார்க்கப்பட்டு பயனாளர்களின் கணக்கிற்கு ப்ளூ டிக் வழங்கும் முடிவும் பெரும் சர்ச்சையானது. அதைதொடர்ந்து, நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும் தனிநபர்களுக்கு நீல நிற டிக் என, மூன்று விதமான டிக்குகளுடன் அமல்படுத்தப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார்.
டிவிட்டரில் 420 வார்த்தைகளை எழுதலாம்?:
டிவிட்டரில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் எலான் மஸ்க், பொதுமக்களின் பல கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, அவர்களின் பரிந்துரைகள் நன்றாக இருந்தால் அவற்றை டிவிட்டர் செயலியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கிறார். அந்த வகையில், ட்விட்டர் பயனர் ஒருவர் ட்விட்டர் 2.0 எழுத்து வரம்பை 280க்கு பதிலாக 420 ஆக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதற்கு மஸ்க், "நல்ல யோசனை" என்று பதிலளிது இருந்தார்.
விரைவில் வருகிறது புதிய அப்டேட்:
அண்மையில், டிவிட்டரில் உள்ள த்ரெட் மற்றும் டிவிட்டர் ஃபைல்ஸ் ஆகிய வசதிகளை குறிப்பிட்டு, உண்மையில் நீண்ட பதிவிடும் வசதி நமக்கு தேவைப்படுகிறது என எலான் மஸ்க் பதிவிட்டு இருந்தார். அதனை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய பயனர் ஒருவர், உங்கள் பொறியியல் மந்திரக்கோலை அசைக்கவும், என் இணைய மகனே என எலான் மஸ்கை டேக் செய்து இருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், அது கிட்டத்தட்ட தயாராக உள்ளது என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அடுத்தடுத்து புதிய அப்டேட் - எலான் மஸ்க்
டிவிட்டர் செயலி சமூக வலைதளாமாக மட்டுமல்லாமல் ஒரு குற்றச்சம்பவம் நிகழும் இடமாகவும் உள்ளது. இதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க உள்ளதோடு, பல்வேறு புதிய அப்டேட்களும் அடுத்தடுத்து டிவிட்டரில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அண்மையில் இதுதொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டு இருந்த மற்றொரு டிவிட்டர் பதிவில், ட்விட்டர் இப்போது நிறைய ஸ்பேம்/ஸ்கேம் கணக்குகளை நீக்குகிறது, எனவே உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைவதை நீங்கள் காணலாம் என குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.