LinkedIn: வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பெற லிங்க்ட்இன் சமூக வலைதளம் பெரிய அளவில் உதவுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட்இன்-க்கு உலகம் முழுவதும் 100 கோடி பயனர்கள் உள்ளனர். உலகளவில் கேமிங் நிறுவனங்கள், பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.


லிங்க்ட்இனின் புது அப்டேட்:


இந்த நிலையில், கேமிங் துறையில் அடியெடுத்து வைக்க உள்ளது லிங்க்ட்இன் சமூக வலைதளம். புதிர் (Puzzle) கேம்களின் பிரபலத்தைப் பயன்படுத்தி பயனர்களை ஈர்க்க லிங்க்ட்இன் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. 


 






ஸ்னிப்பட் கோடிங்கை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் நிமா ஓவ்ஜி, லிங்க்ட்இனின் திட்டம் குறித்து பேசுகையில், "கேமில் தனித்துவமான அம்சத்தை கொண்டு வர லிங்க்ட்இன் முயற்சித்து வருகிறது. லிங்க்ட்இனில் பணியிடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதால் கேம் விளையாடுபவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவரவரின் நிறுவனங்கள் தரவரிசையில் இடம்பெறும்" என்றார்.


குயின்ஸ், இன்பரன்ஸ், கிராஸ்க்ளிம்ப் என்ற பெயரில் 3 Puzzle கேம்களை உருவாக்க லிங்க்ட்இன் முயற்சி எடுத்து வருவதாக டெக்க்ரஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கேம்கள் பயனர்களின் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என தகவல் வெளியிடப்படவில்லை.


பயனர்களை ஈர்க்க லிங்க்ட்இன் அதிரடி:


இதுகுறித்து லிங்க்ட்இன் செய்தித் தொடர்பாளர் விவரிக்கையில், "வேடிக்கையான அனுபவங்களை கொண்டு வரவும் உறவை ஆழப்படுத்தவும் உரையாடலுக்கான வாய்ப்புகளை தூண்டவும் லிங்க்ட்இனில் புதிர் சார்ந்த கேம்களை கொண்டு வர திட்டமிட்டு வருகிறோம். மேலும் காத்திருங்கள்" என்றார்.


பயனர்களை ஈர்க்கும் நோக்கில் கேமிங்கை சாராத பல தளங்கள், தங்கள் தளத்தில் கேம்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில், தற்போது, லிங்க்ட்இன் இணைந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, புகழ்பெற்ற தி நியூயார்க் டைம்ஸ் செய்தி இணையதளம் Wordle கேமை வாங்கியது.


இதனால், Wordle கேம்க்கு மட்டும் இன்றி தி நியூயார்க் டைம்ஸ் செய்தி இணைதளத்திற்கும் பயனர்கள் பெருகினர். இந்த நடவடிக்கை, மேலும் பல ஆன்லைன் கேம்களை கொண்டு வந்து பயனர்களை ஈர்க்க உதவியது. தளங்களில் கேம்களை கொண்டு வரும் முயற்சி மற்ற சமூக வலைதளங்களுக்கு பயன் அளித்ததாக தெரியவில்லை.


குறிப்பாக, கேம்களை அறிமுகப்படுத்தியதால் பேஸ்புக்கின் பயனர்கள் எண்ணிக்கை குறைந்தது. இதன் காரணமாக, தளத்தில் இருந்து கேமை நீக்கும் முடிவை பேஸ்புக் எடுத்தது.