சினிமா துறையில் இப்போதெல்லாம் ஒரு இயக்குநராக வேண்டுமென்றால் மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு ஒரு குறும்படத்தை எடுத்து அது யூடியூப் போன்ற சோசியல் தளங்களில் ஹிட் ஆகிவிட்டாலே, நீங்கள் வெள்ளித்திரையில் படம் எடுப்பதற்கு ஒரு தயாரிப்பாளரை பெறுவது மிகவும் எளிதான விஷயம். ஆனால் ஏறக்குறைய 2010 அதற்கு முன்னரான காலகட்டங்களில் ஒரு இயக்குனராக வருவதென்றால் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. டி.எஃப்.டி போன்ற பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.இதில் சேர்வதற்கு ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதைப்போலவே படிப்பு இல்லாமல் நேரடியாக என்றால் ஒரு இயக்குனரை குறைந்தது மூன்று வருடங்கள் நான்கு வருடங்கள் அவரை பின்  தொடர்ந்து அவரிடம் கடைசி அசிஸ்டென்டாக இணைந்து படிப்படியாக மேலே வந்து தொழிலைக் கற்றுக்கொள்வதற்கு ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆகும்.

 

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவ்வாறாக இல்லை இதற்கு மிக முக்கிய காரணம் இரண்டு விஷயங்களை சொல்லலாம்  கேமராக்கள் ஃபிலிமில் இருந்து டிஜிட்டலாக மாறியது மற்றொன்று  ஆண்ட்ராய்டு போன்களின் அபரிமிதமான வளர்ச்சி ஆகும். மேலும் ஃபிலிம் பொருத்தவரை மிக நுட்பமான லைட்டிங் செய்ய வேண்டி இருக்கும், அதே போல படப்பிடிப்பு தளத்திலிருந்து பதிவு செய்த ஃபிலிம் ரோலை பத்திரமாக லேபில் கொண்டு சேர்த்து அங்கு மிக கவனமாக பிராசசிங் செய்து கொண்டு வர வேண்டும். ஆனால் இன்று இருக்கும் டிஜிட்டல் கேமராக்களில் அவ்வாறான விஷயங்கள் கிடையாது. கேமராவில் பதிவு செய்ததும் அதிலிருக்கும் மெமரி கார்டு அப்படியே எடுத்து லேப்டாப்பில் மாற்றிக்கொள்ளலாம்.

 



 

மேலும் செலவும் அதிகப்படியான வேலை பளு, மிகவும் நுட்பமான பணியாளர்கள் தேவை என்ற நிலையும் இதில் கிடையாது. இதை போலவே லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்கை காப்பி செய்த பின் அதை ஃபார்மட் செய்து அப்படியே கேமராவில் திரும்பவும் பயன்படுத்தலாம். இந்த வசதி சினிமாவை மிகவும் எளிதாக அடுத்த கட்டத்திற்கு அதாவது மிக மிக நுட்பமான கேமராமேன் தேவை என்ற நிலையிலிருந்து மாற்றியது. இந்நிலையில் சினிமாவில் நிறைய (ரீடேக்) மறுபதிவு செய்து கொள்ளும் வசதி, பதிவுசெய்யப்பட்ட காட்சிகளின் நிறத்தை மிக எளிதாக மாற்றிக் கொள்ளும் வசதி ,எடுத்த காட்சியின் பிரேமை ஜூமின் செய்து கொள்ளும் வசதி என எண்ணிலடங்கா வசதிகள் இதில் வந்து சேரவே மிக மிக நுட்பமான இயக்குனர்கள், கேமராமேன்கள் என தேவை இதில் இருக்கவில்லை.

 

இதனால் நன்கு கதை சொல்லத் தெரிந்த ஒரு இயக்குனர் வளர்ந்து வரும் ஒரு கேமராமேனை கொண்டு மிக எளிதாக தன்னுடைய கருத்தை திரை வடிவமாக கொண்டுவர முடிந்தது. இவை இதில் உள்ள நிறைவான ஒரு அம்சமங்களாக பார்க்கப்படுகிறது.  இது டிஜிட்டல் சினிமா என்பதால்  ஃபிலிம் பிராசசிங் லேப்  உதாரணமாக ஜெமினி, பிரசாத்  போன்ற  லேபின் கட்டுப்பாட்டில்  இருந்த  சினிமா, கணினி இருக்கும் எந்த ஊரிலும், எந்த ஒரு அலுவலகத்திலும்  முடிக்கும் நிலைக்கு வந்தது, ஒருவிதத்தில் குறை என்று சொல்லலாம். இப்படி கட்டுப்பாடுகள் குறைந்ததினால் வேலை தெரியாத, ஆர்வம் மிகுதியான சில  இயக்குனர்களால் நிறைய ஊர்களில் இருந்த சினிமா ஆர்வம் மிக்க பணக்காரர்களின் பணத்தை பதம் பார்த்து தரம் குறைந்த  படங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இன்னமும் தூங்கிக்கொண்டு இருக்கின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது.

 



 

அதேநேரம் ஆண்ட்ராய்டு போன்களின் அபரிமிதமான வளர்ச்சி யூடியூப் ,ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியாலும் ,ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும்  எந்த ஒரு ரசிகனும்  தங்களுக்கு பிடித்த விஷயங்களை பதிவேற்ற சினிமா மற்றும் சீரியலைப் போன்று யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் பிரபலங்கள் என ஒரு தனி உலகம் உருவானது. அதிலும் தான் பார்க்கும் படத்தின் காட்சிகள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பிய ஒரு கடைநிலை ரசிகனின் கையில் கிடைத்த ஆண்ட்ராய்டு போன், அவர்களின் மனங்களில் இருந்து ஆசைகளை யூடியூப் சேனல்களின் வழியாக பிரபலப்படுத்தி சினிமா இயக்குனர்களை போட்டிக்கு அழைத்தது என்பதை நாம் மறுக்க முடியாது அதிலும் youtube போன்ற தளங்களில் சமையல் சேனல்கள், ஆன்மீக சேனல்கள் ,நியூஸ் சேனல்கள் youtube தொடர்கள், youtube மூவி என்று சினிமா மட்டுமல்லாமல் தொலைக்காட்சி சேனல்களுக்கும் மிகப் பெரிய சவாலை ஒரு பாமர ரசிகன் ஏற்படுத்தினான் என்பதை மறுப்பதற்கு இல்லை.

 

எனவே இன்றைய டிஜிட்டல் சினிமா தயாரிப்பு என்பது ஃபில்மில் இருந்து டிஜிட்டலுக்கு மாறிய மாற்றத்தினாலும் ஆண்ட்ராய்ட் ஃபோன்களின் வளர்ச்சியினாலும் மிக எளிதான சினிமா உருவாக்கத்திற்கு துணை நிற்கின்றன என்பது முற்றிலும் உண்மை.