இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ந்துள்ள ஜியோ நிறுவனம்  5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நாட்டில் பலரும் இணைய சேவையை பெருவதற்கான புரட்சியை  ஜியோ நிறுவனம் ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. பல ஆண்டுகளாக தொலைத்தொடர்பு சேவையில் இருந்த  நிறுவனங்களும் கூட இன்று ஜியோ வழங்கும் சேவைகளையே பின்பற்றி வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவன நிர்வாக அதிகாரி ரீட் ஹோஸ்டிங்ஸ் கூறுகையில் இந்தியாவில்  நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங்  தளங்களின் வெற்றிக்ககு  ஜியோவே காரணம் என பாராட்டியுள்ளார். அந்த அளவுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டாக்களை வாடிக்கையாளர்களுக்கு தந்து அசத்துகிறது ஜியோ. இந்நிலையில் மற்றுமொரு புரட்சியை ஏற்படுத்த ஜியோ தயாராகிவிட்டது. பலருக்கும் எட்டாக்கனியாக உள்ள 4ஜி சேவை மொபைல்போன்களை மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தவுள்ளது ஜியோ.




இது குறித்து கடந்த ஜூன் மாதம் நடைப்பெற்ற ரிலைன்ஸ் நிறுவனத்தின் 44 வது  AGM  மாநாட்டின் போது அறிவித்திருந்தது ஜியோ. பிரபல கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சையுடன் இந்த மொபைல்போன் உற்பத்திக்கான ஒப்பந்தத்தை செய்தது ஜியோ. ஜியோபோன் நெக்ஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த 4ஜி மொபைலானது வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  சந்தைக்கு வர உள்ளது. இதன் விலை 3,499 ரூபாயாக இருக்கும் என கருதப்படுகிறது.


’ஜியோ போன் நெக்ஸ்டில் ‘என்னென்ன வசதிகள் எதிர்பார்க்கலாம்?


 




ஜியோ போன் நெக்ஸ்ட் மொபைலானது ஆண்ட்ராய் 11 (Go edition)இயங்குதளத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதாக சில இணைய கசிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.குவால்காம் QM215 SoC புராசசருடன் ,5.5 இன்ச் டிஸ்ப்ளே வசதியுடன் இருக்கலாம் என கூறப்படுகிறது. 2 ஜிபி ரேம் அல்லது 3 ஜிபி ரேமுடன் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ரேமின் அளவிற்கு ஏற்ப 16 ஜிபி மற்றும் 32 ஜிபி அளவிலான  eMMC 4.5 உள்ளடக்க மெமரி வசதிகளை கொண்டிருக்கும்.அடிப்படை மொபைல் போன்களில் இருப்பது போல செல்ஃபி கேமராவில் 8 மெகா பிக்சலும், பின்பக்க கேமராவில் 13 மெகா பிக்சலும் கொடுக்கப்பட்டிருக்குமாம். இது தவிர ப்ளூடூத் வசதி,ஜிபிஎஸ், 2,500mAh பேட்டரி வசதி,1080p திறன் கொண்ட வீடியோ ரெக்கார்ட் செய்யும் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கும்  என கூறப்படுகிறது. கூகுள் நிறுவனம் பார்ட்னர்ஷிப்பில் இருப்பதால் சில கூகுள் செயலிகள் மொபைல்போனில் இன்பில்டாக  கொடுக்கப்பட்டிருக்கும்.இந்த மொபைல் போனானது 2ஜி அல்லது 3ஜி இணைய சேவையில் இருந்து 4ஜி சேவைக்கு மாற விரும்புபவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்படிருப்பதாக இதனை உருவாக்கிய ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  மாறாக இதில் ஸ்மார்ட்போன்களில் உள்ள வசதிகளை எதிர்பார்க்க முடியாது.