கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றால் 12 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு- கேரள எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் வௌவால்கள் மூலமாகவும், நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதன் மூலமாகவும் பரவுகிறது. கொரோனா வைரஸ் போன்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவாவிட்டாலும் தொற்று ஏற்படுத்தக்கூடியது.
இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்தார். அந்த சிறுவனுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் சிறுவனுடன் தொடர்பிலிருந்தவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த சிறுவனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 8 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் யாருக்கும் வைரஸ் பாதிப்புகள் இல்லை எனவும் அதே நேரத்தில் வைரசால் பாதிக்கப்பட்ட அறிகுறிகள் தென்பட்டவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, இரண்டாம் கட்டமாக சிறுவனுடன் தொடர்பிலிருந்த 5 பேருக்கு பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு அந்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
முன்னதாக, உயிரிழந்த சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முதலில் சிகிச்சையகத்துக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி என வெவ்வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவ்வாறு சிறுவனுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பிலிருந்த அனைவரையும் கண்டறிவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனுக்கு எப்படி முதன்முதலில் பாதிப்பு ஏற்பட்டது என்பதை அறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழக கேரள எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட 9 மாவட்டங்களின் வழியாக கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் பயணிப்பவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே தமிழ்நாட்டினுள் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் எல்லை மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜிகா வைரஸ் பாதிப்புகளும் உள்ள சூழலில் அதுகுறித்த விழிப்புணர்வையும் வீடு வீடாகச் சென்று மக்களிடையே ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லை மாவட்டங்களில் நடைபெறும் சோதனைகளின்போது உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் மாநிலத்திற்குள் அனுமதிக்காமல் கேரளாவிற்கே திருப்பி அனுப்பப்படுப்வதாகவும் கொரோனா நெகட்டிவ் அல்லது கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
கேரள மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மட்டுமல்லாது பரவும் நோய்களான ஜிகா, நிபா ஆகியவற்றிற்கும் பரிசோதனை நடத்தப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.