Jio Launch 5G: 2023ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள சிறு நகரங்கள் தொடங்கி, கிராமங்கள் வரை உள்ள அனைவரையும் இணைக்கும் அளவிற்கு 5G அலைக்கற்றை சேவை வெற்றிகரமாக தொடங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக மெட்ரோ நகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5G சேவை தீபாவளி முதல் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 




மேலும்,  ரிலையன்ஸ் ஜியோ அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது "உலகின் மிக மேம்பட்ட 5G நெட்வொர்க்கை இந்தியா முழுவதும் வெளியிடுவதற்கும், டிஜிட்டல் இணைப்பு மற்றும் டிஜிட்டல் தீர்வுகளில் இந்தியாவை உலகத்தின் தலைமையாக மாற்றுவதற்கும் ஜியோ தயாராகி வருகிறது. “700MHz, 800MHz, 1800MHz, 3300MHz மற்றும் 26GHz அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெறுவதன் மூலம் அனைத்து 22 வட்டங்களிலும் தலைமைத்துவ நிலையை ஒருங்கிணைக்கிறது. ஜியோவின் தனித்துவமான 700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் தடம், இந்தியா முழுவதும் உண்மையான 5G சேவைகளை வழங்கும் ஒரே ஆபரேட்டராக மாறும்’’ எனக் குறிப்பிட்டிருந்தது. 


அதேபோல், அதானி குழுமம் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளது. ஆனால் இது பொது நெட்வொர்க்குகளுக்கு இல்லை. ஜியோ, 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் உட்பட பல அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளது. 700 மெகா ஹெர்ட்ஸ் என்றாலே 6-10 கிமீ 5G சிக்னல் வரம்பை வழங்கக்கூடிய அளவாகும். 


அக்டோபர் மாதத்திற்குள் 5G சேவை தொடங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ள நிலையில் ஏலம் முடிந்த பிறகு, ஜியோவின் அறிவிப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது.  முதல் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் மூலம் ரூ.13,365 கோடியை அரசு பெறும். தொலைத்தொடர்பு அதிபரான சுனில் பார்தி மிட்டலின் பார்தி ஏர்டெல், 19,867 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பல்வேறு பேண்டுகளில் ரூ.43,084 கோடிக்கு வாங்கியுள்ளது.வோடபோன் ஐடியா லிமிடெட், 18,784 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.