தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் நாளுக்கு நாள் உலகில் பல்வேறு இடங்களில் மாறுதல்களை ஏற்படுத்தி வருகிறது. ரோபோக்களாகட்டும், வெர்ச்சுவல் ரியாலிட்டி வளர்ச்சியாகட்டும் தினம் தினம் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடத்தில் கூட  இறந்த குழந்தை ஒன்றை வெர்சுவலாக உருவாக்கியிருந்தது தொழில்நுட்ப  நிறுவனம் ஒன்று. அதோடு மகளை பிரிந்த தாயை அழைத்து வந்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் தனது தாயுடன் உரையாடவும் வைத்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. குறிப்பாக அந்த தாய் குழந்தையை தொட்டு உணர்வதற்கு ஏற்ற மாதிரியாக சில வசதிகளையும் அந்த தொழில்நுட்ப நிறுவனம் ஏற்படுத்திக்கொடுத்தது. அதுவரையில் தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்த்த பலரும், தாயின் கண்ணீரால் நெகிழ்ந்து  நவீன உலகின் சாதனையை கொண்டாடினர்.






இந்நிலையில்தான் ஜப்பானிய ஸ்டார்டப் நிறுவனமான H2L டெக்னாலஜிஸ் மணிக்கட்டுப் பட்டை ஒன்றை உருவாக்கி, வெர்ச்சுவல் ரியாலிட்டிக்கு பக்க பலமான ஒரு வசதியை சேர்த்துள்ளது. அப்படி என்ன செய்யும் இந்த  மணிக்கட்டு பட்டை என்றால்,  வெர்சுவலாக விளையாடும் அல்லது ஏதாவது ஒரு படத்தை பார்க்கும் பயனாளர்களுக்கு உணர்திறனை லைவ்வாக வழங்குறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் வெர்ச்சுவல் ரியாலிட்டியில் ஒரு கால்பந்து விளையாட்டினை விளையாடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். வேகமாக வரும் அந்த பந்தினை கோல் கீப்பர் தடுத்தால் ரியாலிட்டியில் அவருக்கு வலிக்கும். ஆனால் வெர்ச்சுவலில் அவருக்கு வலிக்காது. ஆனால் இந்த புதிய மணிக்கட்டு பட்டை ,  உண்மையாக அவருக்கு எத்தகைய வலி ஏற்படுமோ அந்த அனுபத்தை கொடுக்கும் என்கிறார்கள். இது தவிர பறவைகள் தங்கள் அலகுகளால் கொத்தினால் ஏற்படும் வலி , கிள்ளினால் உண்டாகும் வலி என  சில உணர்வுகளை இந்த மணிக்கட்டு பட்டை ஏற்படுத்தும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இது electrical stimulation to simulate a range of sensations மூலம் செயல்படுகிறது. 




இந்த கண்டுபிடிப்புக்கு பின்னால் இருப்பவர் Tamaki  என்னும் பெண்தான். இதய நோயால் மரணம் வரையில் சென்ற பிறகுதான் தனக்கு இப்படியான ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்றும் தன்னை போல இதய நோயால் தசையில் உணர்ச்சிகளை இழந்த பலருக்கும் இந்த தொழில்நுட்பம் கைக்கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது போன்றதொரு முயற்சியை இதுவரையில் யாரும் செய்ததில்லை என கூறும்  Tamaki  , வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு என்கிறார்.