தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஃபெல்லோஷிப் படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளார். இதையடுத்து அடுத்த பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழக பாஜகவின் தலைவராக இருப்பவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியலுக்கு வந்தார். பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய அமைச்சரானதும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தொடர்ந்து என் மண், என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரையைத் தொடங்கி நடத்தினார்.
தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டார். எனினும் தோல்வியே அவருக்குப் பரிசாகக் கிடைத்தது. எனினும் பாஜகவின் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்டினார்.
கட்சிக்கு உள்ளும் வெளியேயும் விமர்சனங்கள்
அண்ணாமலை தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளுக்கும் சரவெடி பேச்சுகளுக்கும் பெயர் போனவர். அதனாலேயே கட்சிக்கு உள்ளும் வெளியேயும் ஏராளமான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். இதற்கிடையே பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜனுக்கும் அண்ணாமலைக்கும் மோதல் வெடித்ததாக செய்திகள் வெளியாகின.
சமூக வலைதளங்களில் சொந்தக் கட்சிக்காரர்களே விமர்சிப்பதாகவும் தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் மோசமாக விமர்சிப்பதாகவும் அவ்வாறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழிசை கூறி இருந்தார். இதற்கிடையே பாஜக மூத்த தலைவர் அமித் ஷா தமிழிசையைக் கண்டித்ததாக வீடியோ வைரலானது. எனினும் அண்ணாமலையும் தமிழிசையும் நேரில் சந்தித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அறிவியல் குறித்த ஃபெல்லோஷிப் படிப்புக்கு (Chevening Gurukul Fellowship for Leadership and Excellence) தேர்வாகி உள்ளார் அண்ணாமலை. சுமார் 2.5 மாதங்கள் நடைபெறக் கூடிய இந்த ஃபெல்லோஷிப்புக்கு இந்தியா முழுவதும் இருந்து 12 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமே கவனித்துக்கொள்ளும். சர்வதேச தலைவர்களை உருவாக்குவதற்காக இந்த படிப்பு உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஃபெல்லோஷிப் படிப்பு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடக்க உள்ளது. இதற்கான விசா பணிகளும் முடிந்த நிலையில், ஆகஸ்ட் இறுதியில் அண்ணாமலை லண்டன் செல்ல உள்ளார்.
அடுத்த பாஜக தலைவர் யார்?
இதற்கிடையே அண்ணாமலை படிக்கச் செல்வதால், அடுத்த பாஜக தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் தமிழிசை, அமித் ஷாவைச் சந்தித்த நிலையில், அவர் தற்காலிகமாக பொறுப்புத் தலைவராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இதுகுறித்து அண்ணாமலைக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, ’’ஃபெல்லோஷிப் படிப்புக்காக இரண்டரை மாதங்கள் மட்டுமே லண்டன் செல்கிறார் அண்ணாமலை. அங்கிருந்தபடியே தனது பணிகளைத் தொடர்வார். வேறு தலைவர் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்று தெரிவித்தனர்.