பிரக்யான் ரோவர் செயல்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என,  இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார். 


சந்திரயான் -3:


நிலவின் தென் துருவத்தை ஆராயும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக அங்கு தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த லேண்டர் மற்றும் ரோவர் பல்வேறு ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டன. தொடர்ந்து, நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி குறைய தொடங்கியதை அடுத்து, லேண்டர் மற்றும் விக்ரம் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டது. 14 நாட்கள் கழித்து கடந்த 20ம் தேதி முதல் தென் துருவத்தில் சூரிய ஒளி படர தொடங்கியுள்ளது.


லேண்டரை தட்டி எழுப்ப முயற்சி:


14 நாட்களாக மைனஸ் டிகிரி செல்சியஸ் வரையிலான கடும் குளிர், நிலவின் தென் துருவத்தில் நிலவி வந்தது. தற்போது வெயில் படர தொடங்கியுள்ளதால், ஸ்லீப் மோடில் உள்ள லேண்டர் மற்றும் விக்ரமை மீண்டும் செயல்பட செய்யும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ஆனால், தற்போது வரை ரோவரில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. இதனிடையே, இந்தியா நிலவில் தரையிறங்கியதை பறைசாற்றும் விதமாக, ரோவரின் சக்கரத்தில் இந்தியாவின் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ரோவர் நிலவில் இறங்கும்போது இந்தியாவின் தேசிய சின்னம், நிலவின் தரையில் பதியும் என கூறப்பட்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வியுற்றுள்ளது. இதற்கான காரணங்களை இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார்.


ரோவரின் நிலை என்ன? 


ரோவர் தொடர்பாக பேசிய சோம்நாத், “ரோவர் மற்றும் லேண்டர் எப்போது மீண்டும் செயல்படும் என்று எங்களுக்குத் தெரியாது. அது நாளையாக இருக்கலாம் அல்லது சந்திர நாளின் இறுதி நாளாகவும் இருக்கலாம். ஆனால் நாங்கள் முயற்சி செய்கிறோம். லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் செயல்பட்டால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். ரோவர் முழுமையாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிறைய வடிவமைப்பு பிரக்யான் மற்றும் விக்ரமுக்கு ஒத்திருக்கிறது. அதாவது பிரக்யானுக்கு செய்யப்படும் அனுப்பப்படும் சிக்னல்கள் லேண்டருக்கு வேலை செய்யும்.  முழு சந்திர நாள் வரையும் (14 பூமி நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த காலம் முழுவதும் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும், அதாவது வெப்பநிலை தொடர்ந்து உயரும். வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே இருக்கும் சாதனங்கள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அமைப்புகள் 14 வது நாளில் கூட செயல்பட தொடங்கலாம். அது எப்போது நடக்கும் என்று கணிக்க வழி இல்லை” என கூறினார்.


தேசிய சின்னம் ஏன் பதியவில்லை?


தொடர்ந்து, “நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் சந்திர மண்ணில் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. அந்த முத்திரைகள் ரோவர் ஆய்வில் தெளிவாக காண முடியவில்லை. இதற்கு மண்ணின் தன்மையே காரணம். நிலவின் மண் தூசிகளாக அல்லாமல் மிக இறுக்கமாக உள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி என ஆராய்ச்சியாளர்க ள் கூறுகின்றனர். தென் துருவப் பகுதியில் உள்ள நிலவு மண்ணின் பண்புகள் பற்றிய புதிய புரிதல். தென் துருவப் பகுதியில் உள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது பல எதிர்கால பயணங்களுக்கு இலக்காக இருக்கும்” என சோம்நாத் தெரிவித்துள்ளார்.