பிரவுசிங் செய்வதற்கு எண்ணற்ற பிரவுஸர்கள் உண்டு என்றாலும், எல்லோர் மனதிலும் சட்டென்று நினைவுக்கு வருவது கூகுள் குரோம் தான். உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் அல்லது டேப்லட் என எதுவானாலும் கண்டிப்பாக கூகுள் குரோம் பிரவுஸர் அதில் இடம்பெற்றிருக்கும். சில குறிப்பிட்ட காரணங்கள் மற்றும் பிரத்யேக வசதிகளுக்காக மட்டுமே பிற பிரவுஸர்களை நாம் பயன்படுத்துகிறோம். இதை தவிர்த்து பார்த்தால், உலகெங்கிலும் கூகுள் குரோம் பிரவுஸர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 3.2 பில்லியனாக பதிவாகியுள்ளது.
மற்ற அனைத்து பிரவுஸர்களை காட்டிலும் இந்த எண்ணிக்கை அதிகம். மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தடையில்லா பிரவுஸிங் அனுபவம் போன்றவை தான் இந்த பிரவுஸரை அதிக மக்கள் பயன்படுத்துவதற்கு காரணம் ஆகும். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக பாதுகாப்பான பிரவுஸிங் வசதியை கூகுள் குரோம் வழங்குகிறது. இந்த வசதியை பயன்படுத்தி பிரவுஸிங் செய்யும்போது, உங்கள் டிவைஸ் மால்வேர்களால் தாக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
இதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி அறிக்கை வெளியிட்ட கூகுள், பல விஷயங்களை தெரிவுப்படுத்தி உள்ளது. 'சைட் ஐசோலேஷன் (Site Isolation)' என்பது கூகுள் குரோமில் உள்ள ஒரு பாதுகாப்பு அம்சமாகும், இது நம்பத்தகாத வலைத்தளங்கள் டிவைசை தாக்காமல் இருக்க கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. சாண்ட்பாக்ஸ் என்ற விஷயத்தின் மூலம் கூகுள் குரோம் சந்தேகத்திற்குரிய இணையதளங்கள் பிற இணையதளங்களில் உள்ள பயனர் கணக்குகளில் இருந்து தகவல்களை திருடுவதை மிகவும் கடினமாக்கி உள்ளது. கூகுள் குரோம் பல டேப்களாக திறப்பதால் ஒரே ஒரு பக் மூலம் வேறு சைட்டின் தகவல்களை ஹேக்கர்கள் திருட முடியாது. அதனால் பயனர்களின் தகவல்கள் பெரிய அளவில் பாதுகாக்கப்படுகிறது என்று கூகுள் குரோம் கூறுகிறது. க்ராஸ்-சைட் டேட்டா எனப்படும் HTML, XML, JSON மற்றும் PDF டேட்டா போன்றவை, CORS-ஐ பயன்படுத்தி, சர்வர் அனுமதிமக்கும்வரை, இணையப் பக்கத்தை அணுக அனுமதி வழங்காது.
ப்ரவுஸர் செயல்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சோதனைகள், தவறாகச் செயல்படும் ரெண்டரர் செயல்முறையைக் கண்டறிந்து நிறுத்துகிறது. இந்த வசதி தற்போதைக்கு டெஸ்க்டாப் இயங்குதளங்களில் மட்டுமே அமல்படுத்தப் பட்டுள்ளது. ஏற்கனவே சரிசெய்யப்பட்ட செய்யப்பட்ட பக்ஸ் மூலமாகவோ, பழைய குரோம் வெர்ஷன்களை பயன்படுத்தியோ ஹேக்கர்கள் ஊடுருவலாம் என்பதால், அனைத்து பயனர்களும் தங்கள் குரோம் உலாவியைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கூகுள் அறிவுறுத்தியுள்ளது. கூகுள் இந்த பாதுகாப்பு விஷயத்தில் மேலும் அதிகமாக செயல்பட்டு வருகிறது, முக்கியமாக ஆண்டராய்டு பயனர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் அதிக லேயர்கள் உருவாக்கினால் ஹேக்கர்கள் ஊடுருவுவது இன்னும் கடினமாகும் என்ற அடிப்படையில் மேலும் பல லேயர்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.